கமல்ஹாசன் ஏற்பாடு செய்யும் காவிரி ஆலோசனைக் கூட்டத்தை திமுக கூட்டணி புறக்கணிக்க இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழக ஆளும்கட்சியான அதிமுக.வை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன்! திமுக.வின் கடந்த கால ஆட்சிகள் தொடர்பான விமர்சனங்களை அவர் வைப்பதில்லை.
கமல்ஹாசன், திமுக.வுடன் இணக்கமாக செயல்பட விரும்பும் தனது மனநிலையை பலமுறை வெளிப்படுத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக, காவிரி பிரச்னை தொடர்பாக திமுக கூட்டுகிற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தனக்கும் அழைப்பு வரும் என எதிர்பார்த்தார். அழைப்பு வந்தால், கலந்து கொள்வேன் என வெளிப்படையாக அறிவித்தும் பார்த்தார்.
ஆனால் கமல்ஹாசனை ‘வளர்த்து விட’ திமுக தயாராக இல்லை. வழக்கம்போல மே 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் கமல்ஹாசனுக்கு அழைப்பு இல்லை. இதன்பிறகு கமல்ஹாசன் வகுத்த அரசியல் வியூகம்தான் விசேஷம்!
‘நீங்க கூப்பிடலைன்னா என்ன... நான் கூப்பிடுறேன்... நீங்க வாங்க!’ என்கிற ரீதியில் திமுக.வை அணுகினார் அவர்! திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மே 19-ம் தேதி நல்லகண்ணு தலைமையில் காவிரி ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார் கமல்ஹாசன்!
கமல்ஹாசன், ஸ்டாலினை சந்தித்து சென்ற மறுநாளே இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனிடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. ‘கமல்ஹாசன் நடத்துகிற கூட்டத்திற்கு வருவதாகவோ, தலைமை தாங்குவதாகவோ நல்லகண்ணு ஒப்புக்கொள்ளவில்லை. போகவும் மாட்டார்’ என்றது அந்த அறிக்கை! ஆக, கமல்ஹாசனுடன் இணைந்து களமாடுவதை திமுக அணி விரும்பவில்லை என்பது அப்போதே புரிந்து போனது.
தமிழ்நாட்டில் அத்தனை கட்சிகளையும் தனது ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப் போவதாக கூறிய கமல்ஹாசன், ஸ்டாலினைத் தவிர வேறு யாரையும் சந்திக்க வில்லை. ட்விட்டரில் மட்டும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளாக செயல்பட்டு வரும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் ஆகிய 9 கட்சிகளும் கமல்ஹாசன் ஏற்பாட்டில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என முடிவு செய்திருக்கின்றன.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 17) சென்னையில் செய்தியாளர்களிடம் இந்த முடிவை அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியதாவது : ‘இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதுபற்றி பேசி முடிவெடுக்க இருந்தோம், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் போனில் பேசினேன். அவர்கள் எடுத்த முடிவுப்படி கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என 9 கட்சித் தலைவர்களும் முடிவெடுத்துள்ளோம்.’ என்றார் ஸ்டாலின்.
இதர பெரிய கட்சிகளுடன் இணைந்து போராடுவதே மக்கள் நீதி மய்யத்திற்கு அரசியல் ரீதியான அங்கீகாரமாக இருக்கும் என கமல்ஹாசன் நம்புகிறார். ஆனால் கமல்ஹாசனை உள்ளே விட்டால், மொத்த கேமராக்களும் அவரை நோக்கியே திரும்பும் என்பதால் இதரக் கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. மேலும் இது, ஒரு கட்சி சொந்தக் காலில் பலத்தை நிரூபிக்கிற வரை எதிர்கொள்கிற பிரச்னையும் கூட!