நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மதிமுகவும் வலியுறுத்தியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தலைவர் பதவிகளான, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர்களை நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, மதிமுக களத்தில் குதித்துள்ளன. சமீபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு மாநில அரசு நேரடித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ என்.பெரியசாமி, அனைத்து வாக்காளர்களுக்கும் குடிமைத் தலைவர்களை பொறுப்பாக்க வேண்டும் என்று கூறினார்.
“டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் மறைமுகமாக கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் மீது மக்களுக்கு குறைவான பிடிப்பையே பெறுவார்கள். அதோடு, அவர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த கவுன்சிலர்களை எப்போதும் திருப்தியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு, மறைமுகத் தேர்தல் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்” என்று கூறினார்.
டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், மேயர்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பது குறித்து இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களின் மறைமுகத் தேர்தல்கள் திராவிடக் கட்சிகளுக்கு குறிப்பாக ஆளும் கட்சிக்கு மட்டுமே உதவும். நேரடி தேர்தல் நடத்தப்பட்டால், ஒரு சில நகராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த உயர் பதவிகளும் கிடைப்பதில்லை” என்று கூறினார்.
2011 உள்ளாட்சித் தேர்தலில், மதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமி துரை, புதுக்கோட்டையில் உள்ள கீரமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 15 டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்றை மட்டுமே கைப்பற்றிய போதிலும், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே தேர்தலில், கீரனூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகளில் 3 வார்டுகளை மட்டுமே பெற்றிருந்த போதிலும், காங்கிரசை சேர்ந்த ஆர்.பால்ராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு இடங்களிலும் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. அவர்களின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் உயர் பதவிக்கான போட்டியில் இருந்ததால் தான் அவர்களால் உயர் பதவிகளை பெற முடிந்தது.
சிபிஐ மற்றும் சிபிஎம் போன்ற பிற சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும் 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் போன்ற சில உயர் பதவிகளை கைப்பற்ற முடிந்தது. அப்போது, அந்த பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது.
அதே நேரத்தில், நேரடித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெறுகின்றனர். 2001ல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நகராட்சி தலைவர் ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்ததால்தான், திமுக - அதிமுக ஆகிய பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டாலும், நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், மறைமுக தேர்தலாக இருந்திருந்தால், கவுன்சிலராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்க முடியும், தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்க முடியாது.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.