தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அறிவிப்பதற்கு முன்னதாக, ஆளும் திமுகவும், திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சியான அதிமுகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான இடங்களையே ஒதுக்கீடு செய்தது. இதனால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இருப்பினும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றி பெற்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, சீட் பங்கீடு குறித்து திமுகவின் மாவட்ட செயலாளர்கள் அந்த மாவட்ட கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்களுடன் பேசி முடிவெடுப்பார்கள் என்று அறிவித்தது.
திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக கட்சிகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி நிலவினாலும் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்றுக்கொண்டனர். காரணம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளில் கூடுதலாக கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக, ஆளும் திமுக முந்திக்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் விருப்ப மனு விண்ணப்பங்களை அளிக்கலாம் அறிவிப்பு வெளியிட்டது.
இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், திமுக தலைவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் பேசி சுமூகமான தீர்வு காண்பார்கள் என்று தெரிவித்தனர். உள்ளூரில் கூட்டணி கட்சிகளின் பலத்தையும் செல்வாக்கையும் வைத்தே இடங்கள் பங்கீடு செய்யப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போடியிட விரும்பும் கட்சித் தொண்டர்கள் விண்ணப்பங்களைப் பெற்று விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், வேலூரில் நேற்று (நவம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளது வருத்தமளிக்கிறது. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிப்போம்.” என்று கூறினார்.
இதனால், திமுக வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் பங்கீடு செய்வது தொடர்பாக கூட்டணி கட்சிகளை அழைத்துப் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சியினரிடம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் பங்கீடு குறித்து திமுக, தனது கூட்டணி கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த அழைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால், கடந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கடைசி நேரத்தில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மிக குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்து முடிக்கப்படுமா என்ற விரக்தியும் திமுக கூட்டணி கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.