மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகளின் டிசம்பர் 18ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், இந்த போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று திமுக உறுதி செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். 3 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டங்களை எதிர்த்து ஏர் கலப்பை பேரணிகளை நடத்தி வருகின்றன. அண்மையில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை (டிசம்பர் 18) தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டத்துக்கு சென்னை மாநகர காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில், தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் சென்னை காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகளில், பொது இடங்களில் ஒன்று கூடி போராட்டம் - ஆர்ப்பாட்டம் நடத்த இன்னும் தடை உள்ளதாலும், இந்த அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காவல்துறை அனுமதி மறுத்தாலும், திட்டமிட்டபடி நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil