திமுக மா.செ. வைத்த கெடு : கடுப்பான வைகோ, விட்டுக் கொடுக்காத மு.க.ஸ்டாலின்

அண்ணன் வைகோ.வை பின்பற்றி நானும் சுருக்கமாக முடிக்கிறேன்’ என 9 நிமிடங்களில் தனது பேச்சை முடித்தார் ஸ்டாலின்.

திமுக தோழமைக் கட்சிகள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன் வைத்த கெடுவால் வைகோ கடுப்பானார். ஆனாலும் மா.செ.வை ஸ்டாலின் விட்டுக் கொடுக்கவில்லை.

திமுக தோழமைக் கட்சிகள் இன்று (ஏப்ரல் 16) சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின. எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் வலிமையை குறைக்க நடைபெறும் முயற்சிகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், இடதுசாரி தலைவர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் பேசி முடித்த பிறகு ஸ்டாலினும் பேச வேண்டியிருந்தது. எனவே ஒவ்வொரு தலைவரையும் சுருக்கமாக பேசும்படி ஜெ.அன்பழகன் கேட்டுக்கொண்டபடி இருந்தார்.

வைகோ இதில் சற்றே கோபமடைந்ததாக கூறப்படுகிறது. தனது பேச்சின் நிறைவாக, ‘ என் மீது எல்லையற்ற, எல்லையற்ற, எல்லையற்ற (3 முறை கூறினார்) அன்பு கொண்ட மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் சுருக்கமாக பேசக் கூறியதால், இத்துடன் முடிக்கிறேன்’ என 7 நிமிடங்களில் வைகோ தனது பேச்சை முடித்தார்.

இறுதியாக பேசிய ஸ்டாலின் வைகோ.வை சமாதானப்படுத்தும் வகையில் இப்படி பேசினார். ‘ஜெ.அன்பழகன், அண்ணன் வைகோவிடம் மட்டுமல்ல. என்னையும் சுருக்கமாக பேசி முடிக்கக் கூறியிருக்கிறார். ஆர்ப்பாட்டம் செய்ய நமக்கு அனுமதித்த நேரம் 10 மணி முதல் 11 மணி வரை! இப்போது 11 மணியை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. எனவே அண்ணன் வைகோ.வை பின்பற்றி நானும் சுருக்கமாக முடிக்கிறேன்’ என 9 நிமிடங்களில் தனது பேச்சை முடித்தார் ஸ்டாலின்.

வைகோ.வை சமாதானப்படுத்தியதுடன், திமுக மாவட்டச் செயலாளரான ஜெ.அன்பழகனையும் விட்டுக் கொடுக்காமல் ஸ்டாலின் பேசியதை திமுக தொண்டர்கள் சிலாகித்தனர்.

 

×Close
×Close