Advertisment

சட்டப்பேரவையில் ஒரு நாடகம் அரங்கேற்றி இருக்கிறார்; ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
MLAs of DMK

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சட்டப்பேரவைத் தொடக்க நிகழ்வில் தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் எனக் கூறிய ஆளுநர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆளும் தி.மு.க கூட்டணிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுதிபதி, “நாங்கள் நினைத்திருந்தால் ஆளுநர் உரை இல்லாமல் செய்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆளுநர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி முதலமைச்சர் மரியாதை தருகிறார். அதனால்தான், தெலங்கானா போல இல்லாமல், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடரை தொடங்குகிறோம். நாங்கள் நினைத்திருந்தால் ஆளுநர் உரை இல்லாமல் செய்திருக்கலாம். ஜனநாயகத்தை மதித்து முதலமைச்சர் செயல்படுகிறார். ஆனால், ஆளுநர் அதனை விரும்பவில்லை. ரிமோட் மூலம் இயக்குபவர்களின் படியே ஆளுநர் இயங்குகிறார். ஆளுநரின் செய்கை குறித்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது விமர்சனம் செய்தாரா? இல்லை. அவர்கள் அடிமைகள். ரெய்டுக்கு பயந்துகொண்டுதான் பேட்டி கொடுப்பார்கள்.” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் வெளியேறியதற்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை பேசியதாவது: “சட்டப்பேரவைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வராமலே இருந்திருக்கலாம். அவரை ராஜ மரியாதையோடு, காவல்துறை அணிவகுப்பு கொடுத்து, பேரவைத் தலைவர் படைசூழ அழைத்து மரியாதைக் கொடுத்து அமர வைத்தார்கள். ஆனால், அந்த மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக்கொள்ளவில்லை. அந்த மாண்புகு எதிராக நடந்துகொண்டிருக்கிறார். இதை மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் வந்த உடன் தமிழிலே பேச முயற்சி செய்தார். தமிழ் அவருக்கு சரியாக வரவில்லை. மோடி எப்படி திருக்குறளைப் படிக்கிறாரோ, மோடி எப்படி கவிதைகளைப் படிக்கிறாரோ, அப்படி தப்புத் தப்பாகத் தமிழிலே பேசினார். தவறான உச்சரிப்பைச் செய்தார். அதற்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதை மிகக் குறையாகச் சொன்னார். இரண்டாவது இதில் எழுதி இருப்பதெல்லாம் எனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இதை என்னால் படிக்க முடியாது என்று கூறினார். 

நாங்கள் சாமானியர்களாக கேட்கும் ஒரே கேள்வி, தமிழ்நாட்டின் மரபு எப்போதுமே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் தேசியகீதம், பள்ளிக்கூடங்களில், அரசு நிகழ்ச்சிகளில் இதுதான் நடக்கும். இதைக்கூட புரிந்துகொள்ளாதவர் ஒரு ஆளுநராக இருக்கிறார் அல்லது வேண்டும் என்றே விஷமத்தனம் செய்ய இருக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை சிதைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இப்படிப்பட்ட செயலை இன்று ஆளுநர் அரங்கேற்றிருகிறார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

இவரிடம் ஒப்புதல் பெற்ற பிறகுதான், இந்த ஆளுநர் உரை முடிவுக்கு வருகிறது. ஒப்புதல் பெறப்படும்போதே, இந்த பத்திகள் எனக்குப் பிடிக்கவில்லை, இது ஒரு எதிரான சித்திரத்தை உருவாக்குகிறது, இதையெல்லாம் நான் படிக்கமாட்டேன் என்று கூறியிருக்கலாம், ஒப்புதல் அளித்த பிறகு, இங்கே வந்து ஒரு நாடகம் அரங்கேற்றம் செய்கிறார். ஏனென்றால், இதெல்லாம் என்னால் படிக்க முடியாது. என்னுடைய Concious will not permit (பிரக்ஞை அனுமதிக்காது) இது என்ன ஒரு அபத்தம். நான் முதலமைச்சரிடம் கேட்பது, இந்த ஆளுநரை மாற்றும் வரை, தெலங்கானாவில் எப்படி ஆளுநர் உரை இல்லாமல், சட்டப்பேரவையை நடத்தினார்களோ, அதே போல, அடுத்த ஆண்டு, இவர் நீடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. பா.ஜ.க அரசாங்கம் அமைவதற்கும் வாய்ப்பில்லை, இனிவரும் காலங்களில் இப்படி நடைமுறைப்படுத்தினால், முதலமைச்சர் இப்படிப்பட்ட அவலங்களை அகற்ற வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது. மாண்போடு நடத்துகிறார்கள் ஆளுநரை, ஆனால், தொடர்ந்து அவர் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தவறுகிறார். ஜனநாயகத்துக்கு எதிராகச் செயல்படுகிறார். அதை காங்கிரஸ் சட்டமன்றத்தில் வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, வி.சி.க சட்டமன்றக் கட்சித் தலைவர் சிந்தனைச்செல்வன், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கண்டனம் தெரிவித்தார். இது குறித்து சிந்தனைச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தமிழர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போன்ற சித்திரத்தை ஆளுநர் உருவாக்க முயற்சிப்பது, அருவருப்பானது, கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். ஆனால், தேசிய கீதமே பாடப்படாத ஒரு நிகழ்ச்சியைப் போல, அவர் இந்த நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். தேசிய கீதத்தை 2 முறை பாடுபவர்கள் மிக அதிகமான தேசபக்தி உள்ளவர்கள் என்பது போலவும்,  ஒருமுறை பாடினால் தேசபக்தி இல்லாதவர்கள் என்பது போலவும் அவர் சொல்லியிருப்பது சிறுபிள்ளைத் தனமானது. ஆகவே, தமிழர்களை தேசிய அரங்கிலே தேசபக்திக்கு எதிரானவரகள், தேசிய கீதத்தைக் கூட பாட மறுதலிக்கிறவர்கள் என்பது போன்ற ஒரு பொய்யான, தவறான உண்மைக்கு மாறான ஒரு சித்திரத்தை உருவாக்க முயற்சிப்பது என்பது சங்பரிவார கும்பலுடைய அருவருப்பான அரசியலே ஆகும். தமிழக அரசினுடைய பல்வேறு சாதனைகள், செயல்திட்டங்கள் எல்லாம் மக்களிடத்திலே கொண்டுபோய் சேர்ந்துவிடக் கூடாது, அவை மக்களை அடைந்துவிடக் கூடாது என்று ஆளுநர் இன்றைய நிகழ்ச்சியை சீர்குலைத்திருக்கிறார். இதற்கு மாண்புமிகு சட்டப்பேரவை வளாகத்தை அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பது அரசமைப்பு சாசனத்துக்கு விரோதமானது. தேசிய கீதம் பாடுகிற வரைக்கூட பொறுமை காக்காமல், தேசிய கீதத்தையும்     அவர் அவமதித்திருக்கிறார். தேசிய கீதத்தை அவமதித்திருக்கிற ஆளுநர், தேசபக்தியைப் பற்றி பேசுவது கேலிக்குரியது. ஆளுநரின் இந்த ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கருத்தியல் போக்கை, மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 

தமிழகத்தை தேசிய அளவில் தனிமைப்படுத்த வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார்களின் ஒரு செயல்திட்டம். அந்த அடிப்படையிலே, அதெ பாணியிலே, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கருத்தியல் செயல்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், ரவி பேசியிப் போயிருக்கிறார். ரவியின் முயற்சி ஒருபோதும் பளிக்காது. இன்று ஆர்.என். ரவி அம்பலப்பட்டிருக்கிறார்” என்று சிந்தனைச் செல்வன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் தளி ராமச்சந்திரன், ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். தளி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ஆளுநர் உரை என்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதல் பெற்று பிறகு அச்சடிக்கப்பட்டு, சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே வாசிப்பதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்ட சட்டமன்ற மாண்பு. அந்த மாண்புகளுக்கு எதிராக இன்று ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்கள் மட்டும் ஆளுநர் உரையை வாசித்துவிட்டு, எனக்கு மனமில்லை என்று சொல்வது, இந்த அரசினுடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருப்பது, ஆளுநர் வாசிக்க விருப்பமில்லை என்பதைக் காட்டுகிறது. 

சட்டமன்ற மரபுப்படி, ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி இறுதியாக தேசிய கீதம் இசைப்பது மரபாக இருக்கிறது. ஆனால், ஆளுநர் என்ன சொல்கிறார் என்றால், தேசிய கீதம் தொடங்குவதற்கு முன்பே இசைகப்பட வேண்டும் என்று இறுதியாகவும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். அவர் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பாகவே சட்டமன்றத்தை விட்டு வெளியேறுகிறார். இவ்வாறு, அவர் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடுகளுக்கு எதிராக செயல்படுகின்ற ஆளுநர், தேசியகீதத்தை முதலிலே பாட வேண்டும் என்று சொல்லிவிட்டு, சட்டமன்ற மாண்புகளுக்கும், அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவது கண்டனத்துக்குரியது. இத்தகைய ஆளுநரின் செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடு” என்று தளி ராமச்சந்திரன் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஆளுநர் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டாக வெளிநடப்பு செய்திருக்கிறார். வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஆளும் கட்சியை எதிர்த்து வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், புதிய மரபாக தமிழ்நாட்டின் ஆளுநர் இரண்டாவது முறை வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுநர் இன்று சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதம் முழுக்க முழுக்க சபையின் மரபை மீறிய செயலாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். ஆனால், ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்த பணிகள் குறித்தும் செய்திருக்கக் கூடிய சாதனைகளைக் குறித்தும் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநருக்கு அனுப்பி, ஆளுநர் உடைய ஒப்புதல் பெற்று தேதியும் உரையும் தீர்மானிக்கப்பட்டு ஆளுநர் உரை சட்டமன்றத்திலே அளிக்கப்படுகிறது. ஆனால், அந்த உரையை முழுக்க வாசிக்காமல், இந்த உரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற பல்வேறு செய்திகள் குறித்து தனக்கு கருத்து மாறுபாடு இருப்பதாக ஆளுநர் குறிப்பிடுகின்றார். கருத்து மாறுபாடு இருந்தது என்றால், ஆளுநருக்கு இந்த உரை அனுப்பப்பட்டபோது அதை அவர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், உரையை வாசிக்காமல் அதோடு சேர்த்து இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார். தேசிய கீதத்தை தொடக்கத்திலும், இறுதியிலும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்திருக்கின்றேன். அது நிறைவேற்றப்படவில்லை என்று சொல்கிறார். ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் வழக்கமாக ஆளுநர் உரை நடைபெறும் போது தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனக்குள்ள எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக ஆளுநர் இப்படி பேசினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றைய ஆளுநருடைய உரையின் தமிழாக்கத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் வாசித்தார்கள். மிகச் சிறப்பான சாதனைகளை இந்த அரசு படைத்திருக்கிறது. குறிப்பாக ஒன்றிய அரசு கொண்டுவர இருக்கின்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆளுநர் முழு உரையை வாசிக்காமல் போனதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைப் போல ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தை சிறுமைப்படுத்தி நடந்து கொண்டிருக்கிறார். இப்படி நடப்பது ஒரு முறை அல்ல இரண்டு முறை நடந்து கொண்டிருக்கிறார், ஆளுநர் அவையின் மாண்பை சிதைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக பேரறிஞர் அண்ணா, ஆளுநர் பதவியை பற்றி சொன்னதை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆட்டுக்கு தாடி தேவையில்லை, நாட்டு ஆளுநர் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலமான கேரளாவிலும் அதேபோல, பஞ்சாபிலும் தெலங்கானாவிலும் இன்னும் பல எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment