விவசாயிகளுக்கு ஆதரவு ; டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதம்

இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News Today Live, DMK Protest, DMK Chief MK Stalin
திமுக போராட்டம்

DMK alliances announced one day hunger strike  : டெல்லியில் 18வது நாளாக இன்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் எம்.எஸ்.பியை சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் நடத்தும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆதரவு குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட இருப்பதாக திமுக தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன. வருகின்ற 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக  தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“ இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்துவிட்டெரியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், உழுதுண்போரின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் தேசப் பற்றாளர்களான விவசாயப் பெருமக்களை அவமதித்திடும் வகையில் – அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருப்பதற்கும் ; மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும்; தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகளின் மகத்தான போராட்டத்தை சரியாக மதிப்பிடாமல் அவமதித்துவரும் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் – மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் – இருக்கும் முதலமைச்சர் திரு பழனிச்சாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது.

மேலும் படிக்க : சீனாவின் விவசாய முறை எப்படி வறுமையை ஒழிக்க உதவியது?

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுக்களுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் – அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதலமைச்சர் திரு பழனிச்சாமியையும் கண்டித்தும் – டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் – அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் – 18.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk alliances announced one day hunger strike to show solidarity to the farmer protest

Next Story
சென்னை ஐஐடி-யில் 104 பேருக்கு கொரோனா: அனைத்து மாணவர்களையும் பரிசோதிக்க உத்தரவுIncreased Covid cases in IIT Madras under Temporary Lockdown Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com