தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து பேசுகிறார் எனக் குற்றஞ்சாட்டி தி.மு.க மட்டும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இன்று (நவம்பர் 9) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு அளித்தனர்.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடப்பட்ட கோரிக்க மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடன் நிலுவையில் உள்ள மசோதாக்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் ஆளுநரின் ஒப்புதலுக்கான தாமதம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் தி.மு.க அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அரசின் மசோதாக்களை நிலுவையில் வைப்பது, சனாதனம் குறித்து பேசுவது, கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து ரவியின் கருத்து ஆகியவற்றில் மோதல் போக்கு கடுமையாகியுள்ளது.
அக்டோபர் 23-ம் தேதி கோவையில் நடந்த கார் வெடிவிபத்து தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைப்பதில் அரசு கால தாமதம் செய்ததாக குற்றஞ்சாட்டினார். இதற்கு தி.மு.க அரசு கடும் விமர்சனம் தெரிவித்தது.
பிரிவினைவாதப் பேச்சு
குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட 9 பக்க மனுவில், "தமிழகத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், மொழி பேசுபவர்கள், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என பல தரப்பினர் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளில்
தனக்கு நம்பிக்கை இல்லாததை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி பிரிவினைவாதப் பேச்சுகளில் ஈடுபடுகிறார். ஆபத்தான, பிளவுபடுத்தும் மதச் சொல்லாடல்களை பொதுவெளியில் வெளிப்படுத்துகிறார். அவர் பேச்சுகள் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வகையில் உள்ளன. “உலகின் மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் ஒரு மதத்தைச் சார்ந்திருக்கிறது” என்று ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இந்தியா அரசியலமைப்பு மற்றும் சட்டங்களைச் சார்ந்தது, எந்த மதத்தையும் சார்ந்து இல்லை.
ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர்
ஆளுநர் ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. தமிழகத்தில் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து அவர் தொடர்ந்து பேசி வருகிறார். இது அரசியலமைப்பு சட்டம் 159வது பிரிவின் கீழ் தமிழ்நாட்டு மக்களின் சேவை மற்றும் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணிப்பதாக எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயல் என்பது தெளிவாகிறது. அவரின் பேச்சு, செயல்கள் மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். அவரின் பேச்சு, செயல்கள் மூலம் ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை நிரூபித்துள்ளார். எனவே, உடனடியாக அவரை திரும்ப பெற வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“