Advertisment

பா.ஜ.க இலக்கு செந்தில் பாலாஜி அல்ல; ஸ்டாலின்: கோவை கண்டனக் கூட்டத்தில் தலைவர்கள் உரை

மோடியை ஹிட்லர் என கூப்பிடுங்கள். அமித்ஷாவை முசோலினி அல்லது கோயபல்ஸ் என கூப்பிடுங்கள். மோடி, அமித்ஷா ஏவுகிறார்கள், அமலாக்கத் துறையினர் வருமானவரித் துறையினர் அம்புகளாக பாய்ந்து கொண்டிருக்கிறார்கள் - முத்தரசன்

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை சிவானந்தா காலனி பகுதியில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், அமலாக்கத் துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை கண்டித்தும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நேற்று (ஜுன் 16) கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க மூத்த நிர்வாகிகள் உட்பட கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், தனிமனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் இன்னொரு ஆட்சி சரி செய்யலாம். நீதிமன்றம் அல்லது போராட்டம் மூலம் சரி செய்யலாம். எல்லா அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்கள் தவறாக பயன்படுத்தி அநீதி இழைக்கும் போது நாடு ஸ்தம்பிக்கும். அத்தகைய காட்டாச்சியை எதிர்க்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் காப்பாற்றும் ஒரே தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என மற்ற மாநில தலைவர்கள் சொல்கிறார்கள்.

Advertisment

கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்க சிறப்பாக செயல்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தர வேண்டுமென கைது செய்துள்ளனர். சிறு, சிறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ப.சிதம்பரம் துவங்கி பலரை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். அதானி குழுமம் செய்த மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம். ஆனால் மோடி மெளனம் சாதிக்கிறார். காட்டாச்சி, ஊழல் ஆட்சி, மதவெறி ஆட்சி நடத்துபவர்கள், கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்கி விட்டால் தாமரை மலரும் என கருதுகிறார்கள். அடுத்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடைபெறும். அப்போது இந்திய பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இங்கு இருப்பார்கள். அவர்கள் கலைஞர் வாழ்க என முழங்குவார்கள். அப்போது மோடி, அமித்ஷா இருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

அறிவிக்கப்படாத ஏமர்ஜென்சி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாடு இதுவரை இல்லாத வகையில் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இப்படி இல்லை. தற்போது நம் நாட்டில் அறிவிக்கப்படாத ஏமர்ஜென்சி நடக்கிறது. அனைத்து துறைகளையும் வைத்துக் கொண்டு எதிர்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 8 ஆண்டு முன்பு நடந்ததற்கு, இப்போது தலைமை செயலகத்தில் ஆதாரம் கிடைக்குமா? கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது நடந்ததற்கும், செந்தில் பாலாஜிக்கும் சம்மந்தம் இல்லை. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, அன்புமணி என ஒவ்வொருவராக மிரட்டி வருகிறார்கள். செந்தில் பாலாஜியையும் மிரட்டியுள்ளார்கள். அதற்கு அடிபணிந்து விட மாட்டோம் என செந்தில் பாலாஜி சொன்னதால் தான் இந்த வெறி, கோபம் உள்ளது. கோவையில் திமுக வெல்ல செந்தில் பாலாஜி காரணமாக இருந்ததால், அவரை முடக்க வேண்டுமென கைது செய்துள்ளார்கள்.

மற்ற மாநிலங்களைப் போல நடத்தி விடலாம் என நினைத்தால் ஏமார்ந்து விடுவீர்கள். பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு 2024ல் இந்த ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டுமென முடிவு எடுத்துள்ளார்கள். உங்களுக்கு சாவு மணி ஒலித்து விட்டது. அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விட்டது. நமது கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்.

மோடி ஒரு ஹிட்லர், அமித்ஷா ஒரு முசோலினி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சங்பரிவார் அமைப்புகளுக்கு சமாதி கட்டும் வரை இந்த கூட்டணி தொடரும். அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 0.05 சதவீத வழக்குகளில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட அமைப்புகளே தவிர மோடி உருவாக்கிய அமைப்புகள் அல்ல. அவை சுதந்திரமான செயல்பட கூடிய அமைப்புகள். அப்படி தான் கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அவற்றை அடிமை அமைப்புகளாக மாற்றி விட்டார். மோடியை ஹிட்லர் என கூப்பிடுங்கள். அமித்ஷாவை முசோலினி அல்லது கோயபல்ஸ் என கூப்பிடுங்கள். மோடி, அமித்ஷா ஏவுகிறார்கள், அமலாக்கத்துறையினர் வருமானவரித்துறையினர் அம்புகளாக பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

யார் அமைச்சராக இருக்க வேண்டுமென முடிவு செய்வது முதலமைச்சர். அவர் அமைச்சரவை பொறுப்புகளை பகிர்ந்து அளித்து அனுப்பிய கடித்ததை திருப்பி அனுப்பும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் வழங்கியது? ஆளுநருக்கான அனைத்து செலவுகளை மாநில அரசுகள் தான் செய்கிறது. ஆளுநர் மாளிகைக்கு அவ்வளவு பெரிய நிலம் தேவையில்லை. தமிழக அரசிற்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது எனத் தெரிவித்தார்.

பாஜகவின் உண்மையான இலக்கு செந்தில் பாலாஜி அல்ல, முதலமைச்சர் தான் - திருமா

நிகழ்வில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்கு இருக்கிறது அவரை விசாரிக்கிறோம் என வாதிடுகிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான நோக்கமும் இலக்கும் செந்தில் பாலாஜி அல்ல தமிழக முதல்வர் தான். முதல்வருக்கு நெருக்கடியை தர வேண்டும் அவரை நிலைகுலைய செய்ய வேண்டும், அப்போதுதான் அகில இந்திய அளவில் ஒருங்கிணைக்கின்ற முயற்சியை முறியடிக்க முடியும் என்று மோடி அமித்ஷா கும்பல் கணக்கிடுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என்று கூறியதில் இருந்து தற்போது வரை அந்த நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கவில்லை. இது மோடி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது தான் அவர்களின் கனவு.

publive-image

எனவே ஒவ்வொரு மாநிலமாக காங்கிரசையும் கூட்டணி கட்சிகளையும் உடைத்து பலவீனப்படுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை அவர்களால் யூகிக்க முடிகிறது. பாஜகவை வீழ்த்துவதில் அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் கொள்கை ரீதியாகவும் உறுதியாக இருப்பவர் மு க ஸ்டாலின். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது நெருக்கடியை தருகிறார் அரசியல்வாதி போல் செயல்படுகிறார். ஆளுநர் செய்வது அவரது செயல் அல்ல ஆர் எஸ் எஸ் செயல். பெரியார் அரசியலை அழித்து ஒழிக்க நினைக்கிறார்கள். அவர்கள் இன்னும் மு.க.ஸ்டாலின் ஆற்றலை தெரிந்து கொள்ளவில்லை. முதலமைச்சரே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாக உள்ளது வலுவாக உள்ளது அழுத்தமாக உள்ளது சனாதன சக்திகளின் சங்கையும் குரல்வலையையும் நெறிப்பதாக உள்ளது. நாங்கள் உங்களுக்கு உற்றத் துணையாக இருக்கிறோம் என்றார்.

மதிமுக திமுகவிற்கு அரணாக நிற்கும்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், முதலமைச்சர்தான் அமைச்சர்களுக்கான இலாகாக்களை பிரிக்க வேண்டும், அதை திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. முதலில் முதலமைச்சர் அமைச்சர்களுக்கு இலாக்காக்களை பிரித்து அனுப்பிய போது ஏற்றுக் கொள்ளாமல் தற்போது மட்டும் ஏன் ஏற்றுக் கொண்டீர்கள்?. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்க மறுத்தீர்கள், டாக்டர் கலைஞரின் பெயரையும் உச்சரிக்க மறுத்தீர்கள், பேரறிஞர் அண்ணாவின் பெயரை உச்சரிக்க மறுத்தீர்கள்.

பாஜக போட்ட பிச்சை பாத்திரத்தில் இருந்து பிச்சையாக எடுத்து வந்து நீங்கள் கவர்னராக அமர்ந்திருக்கிறீர்கள். முதலமைச்சர் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொண்டு வருகிறார் ஆனால் ஆளுநர் வெளிநாடுகளில் முதலீடுகள் எல்லாம் தரமாட்டார்கள் என கூறுகிறார். கொங்கு மண்டலத்தில் ஹிந்தியை திணிக்கலாம் என்று நினைத்தால் ஒரு காலமும் அது நடக்காது. தமிழ்நாட்டில் தமிழைக் கொச்சைப்படுத்துகின்ற வேலையிலும் நீங்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். ஒட்டு மொத்த தமிழகமும் சீறி எழுந்தால் இந்திய அரசாங்கத்தையே எதிர்க்கக் கூடிய சக்தி தமிழ்நாட்டிற்கு உண்டு என்பது 1965 லேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் மதிமுகவிற்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் திமுகவிற்கு மதிமுக காவல் அரணாக இருக்கும் என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி நிரபராதி என நிரூபிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? - கே.எஸ்.அழகிரி

இக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறி வைக்கப்படுகிறார். பாஜகவினரின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை முதலமைச்சரை எதிர்ப்பதால் அவர்கள் முதலமைச்சரை குறி வைக்கிறார்கள். எனவே முதலமைச்சருக்கு எதிரான செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் இறங்கியுள்ளது, மோடியும் இறங்கி உள்ளார். தமிழக முதலமைச்சர் சனாதனத்திற்கு எதிராக பேசக்கூடாது எனவும் ஆர் எஸ் எஸ் கொள்கைகளுக்கு ஆதரவாக பேச வேண்டும் எனவும் மதவாதத்திற்கு ஆதரவாக பேச வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைகின்ற பணிகளில் ஈடுபடக் கூடாது எனவும் அவர்கள் விரும்புகிறார்கள். ராகுல் காந்தியை பிரதமர் என்று முதலமைச்சர் கூறியது தான் அவர்களின் கோபத்தின் உச்சி நிலை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு செந்தில் பாலாஜி மீதோ, வேறு விஷயங்கள் மீதோ கோபம் இல்லை, முதலமைச்சரை முடக்க வேண்டும் என்று சொன்னால் இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே இதனை ஒரு கொள்கை போர் என புரிந்து கொள்ளுங்கள்.

தேர்தல் காலத்தில் நாம் வெற்றி பெறுவது தான் மோடிக்கான பதில் ஆளுநருக்கான பதில். 33 மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளது அப்படி இருக்கும் பொழுது அவர்கள் எப்படி அமைச்சராக இருக்கிறார்கள்?. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாட்டின் மறுமலர்ச்சியை கொண்டு வந்துள்ளது. ஒரு கருத்துக் கணிப்பில் ராகுல் காந்தி பிரதமராக வருவார் என 71% கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்து உள்ளீர்கள் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஹிட்லர் மற்றும் முசோலினியை விட மோடி அமித்ஷா மோசமாக உள்ளார்கள். செந்தில் பாலாஜி நிரபராதி என நாளை நிரூபிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வீர்கள்?. அதேசமயம் அவர் தொடர்பான சோதனைகளில் என்னென்ன கிடைத்தது என்பதையும் இதுவரை சொல்லவில்லை. நள்ளிரவில் கைது செய்வதற்கு செந்தில் பாலாஜி என்ன தேச துரோகியா?, பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளித்தும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அவரிடம் விசாரணையோ சோதனையோ கூட செய்யவில்லை. பாஜக எம்பி க்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு ஒரு மாநில அமைச்சருக்கு இல்லை என தெரிவித்தார்.

வழக்கு இருந்தாலும் அமைச்சராக இருக்க குஜராத் மாடலே உதாரணம்

திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறுகையில், திமுக மீது பழியை போட்டு மிரட்டி விடலாம் என நினைத்தால் ஒருபோதும் நடக்காது. இது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்டு இருக்கும் அநீதி என தனித்து பார்க்காதீர்கள். திமுகவை அச்சுறுத்தி பார்க்கலாம் என தப்பு கணக்கு போட்டுள்ளார்கள். இந்த இயக்கம் எதிர்ப்பில் வளர்ந்த இயக்கம். நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் காவி வர முடியாது. கொங்கு மண்டலம் பெரியார் மண். இடையில் இங்கு சரிவு வந்த போது செந்தில் பாலாஜி தான் வெற்றியை தேடி தந்தார். செந்தில் பாலாஜியின் கைது பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. ம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூன்றும் பாஜகவின் திரிசூலமாக உள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட திருப்பம் இந்தியா முழுவதற்கும் வரும்.

திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென தலைமை செயலகத்திற்குள் சென்றுள்ளார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கிற்கு, ஊழல் என மிகப்பெரிய புரளியை கிளப்ப தலைமை செயலகத்திற்குள் நுழைந்துள்ளார்கள். விபரம் தெரியாத மக்களை குழப்ப வேண்டும் என இதனை செய்கிறார்கள். 18 மணி நேரம் விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை நோயாளியாக ஆக்கியுள்ளார்கள். 2024 ல் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என ஜோசியக்காரர்கள் சொல்லியுள்ளார்கள். அதனால் 2023 ல் தேர்தலை வைக்க நினைக்கிறார்கள்.

அமலாக்கத் துறை வங்கி அதிகாரிகளை அழைத்து செல்ல எந்த சட்டத்தில் அதிகாரம் உள்ளது? குற்றமற்றவர் என நிரூபிக்க சட்டப்படி செந்தில் பாலாஜிக்கு பல வாய்ப்புகள் உள்ளது. அமித்ஷா மீது வழக்கு போட்ட போது, அவர் குஜராத் மாநில அமைச்சராக தான் இருந்தார். வழக்கு இருந்தாலும் அமைச்சராக இருக்க குஜராத் மாடலே உதாரணமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகம் ஆயத்தமாகி விட்டது. இது தேர்தல் கூட்டணியல்ல. கொள்கை கூட்டணி. ஒரு செந்தில் பாலாஜியை அல்ல. ஆயிரம் செந்தில் பாலாஜிகளை உருவாக்கும் ஆற்றல் திராவிட இயக்கங்களுக்கு உண்டு என்றார்.

சனதான பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்

இறுதியாக கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சனதான பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றார். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஒன்றல்ல இரண்டல்ல. செந்தில் பாலாஜி என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என இதுவரை தெரிவிக்கவில்லை. சம்மன் கொடுக்காமல், வழக்கு பற்றி தெரிவிக்காமல் கையெழுத்து போடுமாறு அமலாக்கத் துறையினரால் கொடுமையாக நடத்தப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அதைப்பற்றி நீதிமன்றத்தில் நேரம் வரும் போது சொல்வோம். செந்தில் பாலாஜி இதய வலியால் துடித்த போது, நடிக்கிறார் என நினைத்து அதிகாரிகள் அவரை பிடித்து தூக்கிய போது அவரது தலை கான்கீரிட் சிலாப்பில் மோதி தலையில் அடிபட்டுள்ளது.

மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். 8 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது என்ன அநியாயம்?. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த அதிகாரிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தர இலஞ்சம் வாங்கியதாக எங்கும் நிரூபிக்கவில்லை. ஊழல் வழக்கிற்கும், சட்ட விரோத பண பரிவர்த்தனைக்கும் சம்மந்தம் இல்லை.

அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட புகாருக்கு, திமுக ஆட்சியில் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து மிரட்டி பார்க்கிறார்கள். நெருக்கடி காலத்தில் நெருப்பாற்றில் நீந்தியவர் ஸ்டாலின். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை மறந்து விடக்கூடாது. அரவக்குறிச்சியில் தோற்ற ஆட்டுக்குட்டி அண்ணாமலையை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளேன். 14 ம் அவர் தேதி வருவார். கொங்கு மண்டலத்தில் தேர்தல்களில் வெற்றி வாகை சூட காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி.

கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவராக செந்தில் பாலாஜி விளங்குகிறார். 2015 ல் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து வருகிறார்கள். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி தலைமையில் 11 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆட்சிக்கு மீண்டும் ஒரு மகுடம் சூட்டுவோம். பாராளுமன்ற தேர்தல் வெற்றி விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடக்கும் எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment