விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன், தமிழ்நாட்டின் மிக முக்கிய தலித் தலைவராக காணப்படுகிறார். மேலும், ஆளும் தி.மு.க அரசின் கூட்டணியிலும் முக்கிய பங்கு வகிக்கிறார். திருமாவளவன் தனது அரசியல் பயணத்தில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளார். ஆனால், தற்போது சற்று வித்தியாசமான பிரச்சனையை அவர் எதிர் கொண்டுள்ளார். தற்போதைய பிரச்சனை சாதிய மற்றும் வகுப்புவாத அரசியலால் ஏற்படவில்லை. மாறாக, அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DMK ally in choppy waters as gamble on ‘lottery king’ Santiago Martin’s son-in-law backfires
சர்ச்சைக்கு பெயர் போன "லாட்டரி மன்னன்" சாண்டியாகோ மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அசுர வளர்ச்சியை பெற்றார். இதனிடையே, தி.மு.க தலைமை குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை ஆதவ் அர்ஜுனா பேசி வந்தார். ஆதவ் அர்ஜுனா குறித்து பல வி.சி.க முக்கிய நிர்வாகிகளும் திருமாவளவனை எச்சரித்தனர். ஆனால், அப்போது திருமாவளவன் செவிசாய்க்கவில்லை.
இந்தச் சூழலில் தான், கடந்த திங்களன்று ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திருமாவளவன் உத்தரவிட்டார். குறிப்பாக, கட்சியின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வி.சி.க.வின் ஒழுக்கம் மற்றும் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பல அழுத்தங்களுக்கு இடையே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே திருமாவளவன் கட்சி மீதான தனது பிடியை இழந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தான் ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். மிகக் குறுகிய நாள்களிலேயே ஆதவ் அர்ஜுனாவிற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தலித் அடையாளமோ அல்லது அரசியல் ஆளுமைக்ககான பின்னணியோ இல்லாத நிலையிலும், பண பலத்தின் அடிப்படையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு பதவி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த உடனேயே, கட்சியை சீரமைக்கும் விதமாக பல்வேறு கூட்டங்களை ஆதவ் அர்ஜுனா நடத்தினார். குறிப்பாக, பூத் ஏஜெண்ட்கள் கூட்டம், சாதி ஒழிப்பு மற்றும் மதுபானத்திற்கு எதிரான கூட்டங்களை அவர் நடத்தினார். அப்போது, ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததாக திருமாவளவன் கூறியிருந்தார்.
"ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்க்க திருமாவளவன் முடிவு செய்த பின்னர் தான் எங்களிடம் தெரிவித்தார்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு தலைவர் கூறியுள்ளார். "ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என தி.மு.க வலியுறுத்தியது. அவர் பிரச்சனையை ஏற்படுத்துவார் என தி.மு.க.வினர் கூறினர். ஆனால், இந்த கருத்துகளை திருமாவளவன் புறந்தள்ளினார்" என்றும் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தி.மு.க தரப்பு வட்டாரங்களின் படி, ஆதவ் அர்ஜுனா கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தி.மு.கவுடன் தொடர்பில் இருந்ததாக கூறுகின்றனர். குறிப்பாக, பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம் அமைக்கும் குழுவுடன் கட்சிக்கு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் பங்காற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களின் போது தி.மு.க சார்பாக போட்டியிட அவர் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. “கட்சிப் பணி ஆற்றாமல் ஆதவ் அர்ஜுனாவை அரசியல் ரீதியாக வளர்த்து விட முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தான் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்” என தி.மு.க தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்துவதற்காக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம், கடந்த 2022-23 ஆம் ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. இதைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டில் அவர் வி.சி.கவில் சேர்ந்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கும் ஆதவ் அர்ஜுனா விருப்பம் தெரிவித்தார். இதற்காக திருமாவளவன் சம்மதம் தெரிவித்தார். தி.மு.க.விடம் பொதுத் தொகுதியில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளை காரணம் காண்பித்து தி.மு.க மறுத்துவிட்டது” என வி.சி.க தலைவர் ஒருவர் கூறுகிறார்.
இதனால் ஆதவ் அர்ஜுனா ஏமாற்றம் அடைந்தார். “தனது கனவுகளை அடைவதற்காக வி.சி.க.வை ஆதவ் அர்ஜுனா ஏணியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். இதன் தொடர்ச்சியாக, தி.மு.க.விற்கு எதிரான கருத்துகளை அவர் பேச தொடங்கினார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். உதயநிதி ஸ்டாலினை வெறும் சினிமா நடிகர் எனக் கூறினார். நாங்கள் நடத்திய கூட்டங்களுக்கு அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்தார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஆதரவாக கருத்து பதிவிட்டார். இதனால், கூட்டணிக்குள் விரிசல் விரிவடைந்தது. எனினும், ஆதவ் அர்ஜுனா ஏற்படுத்திய பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள திருமாவளவன் தயக்கம் காட்டினார்” என வி.சி.க தரப்பு கூறுகிறது.
இந்நிலையில், தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பிரச்சனை பெரிதானது. இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், திருமாவளவனால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாத சூழல் உருவானதாகவும் தெரிகிறது. “நூல் வெளியீட்டு விழா குறித்து ஆதவ் அர்ஜுனாவின் திட்டங்கள் அனைத்தையும் நான் அறிந்து கொண்டேன். விழாவில் நான் பங்கேற்காவிட்டாலும், இந்த புத்தகத்திற்காக பணியாற்றியதால், ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்குமாறு கூறினேன். ஆதவ் அர்ஜுனா தனது உரையில் கவனமாக இருக்க வேண்டும் என நான் அறிவுறுத்தினேன். ஆனால், அவர் கேட்கவில்லை” என திருமாவளவன் கடந்த சனிக்கிழமையன்று கூறியிருந்தார்.
ஏற்கனவே, தி.மு.க குறித்து கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்திருந்தார். இந்நிலையில், விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொண்ட ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் கடுமையானதாகவே இருந்தது. குறிப்பாக, தி.மு.க.வை மன்னராட்சி என அவர் கூறினார். மேலும், சினிமா முதல் அரசியல் வரை அவர்கள் கட்டுப்படுத்துவதாகவும் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார்.
தி.மு.க.வின் அழுத்தத்தால் தான், விழாவில் திருமாவளவன் பங்கேற்கவில்லை என விஜய் குற்றச்சாட்டை முன்வைத்தார். மறுபுறம், விஜய்யின் கொள்கைகளை புகழ்ந்த ஆதவ் அர்ஜுனா, அவரை புதிய தலைவர் எனவும் குறிப்பிட்டார்.
"இந்த சங்கடத்தை தவிர்த்திருக்கலாம்" என மற்றொரு வி.சி.க தலைவர் தெரிவித்துள்ளார். "ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்ற அறிவுரையை திருமாவளவன் தவிர்த்தார். இது குறித்து 2024 தேர்தலுக்கு முன்பே தி.மு.க எச்சரிக்கை விடுத்தது. தி.மு.க.வினருக்கு ஆதவ் அர்ஜுனா குறித்து தெரியும். ஆதவ் அர்ஜுனாவை நம்ப வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் எழுச்சியும், வீழ்ச்சியும் தமிழக தலித் அரசியலில் முக்கியமான நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ்டாங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, தி.மு.க குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மாநிலத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதம் இருந்தாலும், பெரிய அரசியல் கட்சிகளில் மிகச் சில தலித் தலைமைகளே உள்ளன.
"திருமாவளவன் கடந்த காலங்களில் இருந்து வளர்ச்சி அடைந்துள்ளார். தலித் அரசியல் என்ற குறுகிய வட்டத்தையும் கடந்து, இந்திய அரசியலில் முக்கியமான இடத்தை அவர் பெற்றுள்ளார். அவருக்கு அனைத்து இடங்களிலும் நண்பர்கள் உள்ளனர். அவரது அரசியல் பயணத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமே பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் விவகாரம் வித்தியாசமானது" என தி.மு.க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த புயலுக்கு பின்னரும், தி.மு.க மற்றும் வி.சி.க இடையேயான கூட்டணி தொடர்கிறது. "கூட்டணிக்குள் விரிசல் தெரிகிறது. இந்த சூழலை திருமாவளவன் கையாண்ட விதம் அவரது அரசியல் ஆளுமையை காண்பிக்கிறது. எனினும், அடுத்த தேர்தல் கூட்டணிக்கான ஒப்பந்தம் போடும் வரை வி.சி.க.வை எங்கள் தலைமை நம்பாது. இது ஆதவ் அர்ஜுனா குறித்து அல்ல; நம்பிக்கையை குறித்த பார்வை" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- Arun Janardhanan
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.