தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநரை பேச விடாமல், பேரவையை விட்டு வெளியேறச் சொல்லி தி.மு.க கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர்.
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் தேதிக் குறிப்பிடாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு அல்லது தமிழகம்? கவர்னர் – தி.மு.க மோதலில் மொழிபெயர்ப்பு தோல்வி
இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 2023 ஜனவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதனையடுத்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சகோதர சகோதரிகளே என தமிழில் பேச்சை தொடங்கி, அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று உரையை தொடர்ந்தார்.
அப்போது ஆளும் தி.மு.க கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் ஆளுநரை பேரவையை விட்டு வெளியேறச் சொல்லி, பேச விடாமல் முழக்கங்களை எழுப்பினர். கவர்னர் ரவியின் உரையை எதிர்த்து கூட்டணிக் கட்சிகள் கூச்சல் எழுப்பினர், அமளியில் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். கவர்னரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். மாநில உரிமைகளை பறிக்காதே, திருக்குறளை திரிக்காதே, தமிழ்நாட்டை வஞ்சிக்காதே, என்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil