திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக விரைந்து செயல்பட்டு வருகிறது. கட்சி நிர்வாக வசதிக்காக நிர்வாகிகளை மாற்றி அமைத்து வருகிறது. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி வழியாக விருதுநகர் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த நிலையில், திமுகவில் நிர்வாக வசதிகளுக்காக நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மாற்றியமைத்து அந்த மாவட்டங்களுக்கு இன்று புதிய பொறுப்பாளர்கள் நியமித்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்திய ஆகிய மாவட்டங்கள், கழக வசதிகளுக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் திருநெல்வேலி கிழக்கு - திருநெல்வேலி மத்திய - தென்காசி வடக்கு - தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில், அம்பாசமுத்திரம், நாங்குனேரி, இராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மத்திய மாவட்டத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தென்காசி வடக்கு மாவட்டத்தில், வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தென்காசி தெற்கு மாவட்டத்தில், சங்கரன் கோயில் (தனி) தென்காசி, ஆலங்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, திமுகவில் நிர்வாக வசதிக்காக மாற்றியமைக்கப்பட்ட திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய மாவட்ட, தென்காசி தெற்கு, தென்காசி வடக்கு மாட்டங்களுக்கு திமுக புதிய பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்துள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக இரா.ஆவுடையப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக அபுதுல் வஹாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக சிவபத்மநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி வடக்கு மாவட்டம் பொறுப்பாளராக ஆ.துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"