தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பழைய, பிஞ்சுபோன செருப்புடன் ஒப்பிட்டு பேசி விமர்சித்தது மொழி உரிமைக்காகப் போராடிய தியாகிகளை அவமதிக்கும் செயல் என்று கூறி தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா சார்பில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பொதுமக்கள் நீங்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாமல் 1980-ல் பேசினதையே பேசுகிறார், இந்தி, சமஸ்கிருதம், இது, அது, வடக்கு தெற்கு, இந்த பிஞ்சுபோன செருப்பையெல்லாம் தூக்கி எறியவில்லை தி.மு.க” என்று பேசியது சர்ச்சையானது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு, தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன், “அண்ணாமலை மொழிப்போர் தியாகிகளை இழிவுபடுத்தியுள்ளார், இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாபெரும் வரலாறு தமிழகத்திற்கு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலையின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது குறித்து சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பிரதமர் மோடி ஏன் கண்டிக்கவில்லை? அண்ணாமலை அதை (இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை) பிஞ்சுபோன செருப்புடன் ஒப்பிட்டார். இதுதான் தமிழக மக்கள் மீது வைத்திருக்கும் மரியாதையா” என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், அண்ணாமலை இப்படிக் கூறியது முட்டாள்தனம் என்று அ.தி.மு.க-வினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அவமதிப்பது அவருடைய குணத்தையே காட்டுகிறது. இந்தி படித்தவர்கள் ஏன் இங்கு வேலைக்கு வருகிறார்கள் என்று அண்ணாமலையிடம் கேட்கிறேன். ஆனால், தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் வெளிநாடு அல்லது இஸ்ரோவுக்கு (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) சென்று பெரிய மருத்துவர்களாகவும் ஆகிவிட்டனர். அண்ணாமலையின் வார்த்தைகளை முட்டாள்தனமாகத்தான் பார்க்கிறேன்” என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செல்லூர் ராஜூ கூறினார்.
தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலில் மொழிப்போர் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மு.க.வின் தீவிரப் பங்கு அக்கட்சியை மாநிலத் தேர்தலில் வெற்றிபெற வழிவகுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“