தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர் அளவிலான பிரச்னைகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, தலைவர்கள் தேசிய பிரச்னைகளையும் மாநில அளவிலான பிரச்னைகளையும் பேசி வருவதால் இது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா அல்லது மக்களைத் தேர்தாலா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய திரைகள் வைத்து மு.க.ஸ்டாலினின் பிரச்சார உரை திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்பப்படுகிறது. அதே போல, திமுக அமைச்சர்கள் பலரும் அவரவர் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுகவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக தாக்கி பிரசாராம் செய்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜகவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தனித்து தைரியமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று ஆளும் திமுகவை கடுமையாக தாக்கி வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை பேசுவார்கள், உள்ளூர் அளவிலான கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்து பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், பெரும்பாலும் தேசிய பிரச்னைகளையும் மாநில அளவிலான பிரச்னைகளையும் முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால், இது உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா அல்லது மக்களவைத் தேர்தலா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகத் தாக்கி வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, திமுக ஆட்சியில், மாநிலத்தில் போதுமான வளர்ச்சி என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் விமர்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மழை வெள்ளப் பாதிப்பின் போது திமுக அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். திமுக அரசு இன்னும் நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் வழக்கமான தேர்தல் பிரச்சாரமாகவே அமைந்துள்ளது.
திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தலில் தேசிய பிரச்னைகள் ஒன்றுமில்லை. இது மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் உள்ளூர் பிரச்னைகளை விடுத்து தேசிய பிரச்னைகளைப் பேசி பிரச்சாரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தேசிய பிரச்சனைகளைப் பேசி திசைமாறி பிரச்சாரம் செய்யும் தலைவர்களைப் பார்க்கும் அரசியல் நோக்கர்கள், இது உள்ளாட்சித் தேர்தல்னு யாராவது சொல்லுங்கப்பா என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.