மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தார். நேற்று (ஜுன் 11) காலை சென்னை கோவிலம்பாக்கத்தில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய அமித்ஷா, வரும் காலங்களில் ஒரு தமிழரை பிரதமராக்க உறுதி ஏற்போம். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 2 பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம். இரு முறை பிரதமர்களை தவறவிட காரணம் தி.மு.க என்று பேசினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்திற்கு கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் குறித்து அமித்ஷா பட்டியில் இட வேண்டும் என கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூ. 2 லட்சத்து 47 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. காசி, குஜராத்தில் தமிழைப் பரப்பியவர் நரேந்திர மோடி. திருக்குறள் 23 மொழிகளில் மொழிபெயர்க்க காரணமாக இருந்தவர் மோடி. சி.ஆர்.பி.எஃப். மற்றும் நீட் ஆகிய தேர்வுகளை தமிழில் எழுதுவதற்கு வழிவகுத்தவர் பிரதமர் மோடி. ரூ.50 ஆயிரம் கோடியில் சென்னை - சேலத்திற்கு விரைவு சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" எனப் பதிலளித்தார்.
இந்நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
டி.ஆர். பாலு
திமுக, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. "ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் அமித் ஷா. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத அமித் ஷா , முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். பாஜக ஆட்சியில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை
உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பாஜக ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக ஜி.எஸ்.டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து அதிக வருவாய் ஒன்றியத்திற்குக் கிடைக்கும்போது கூட தமிழ்நாட்டை ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
அதற்கு பதில், தமிழ்நாட்டில் வசூலித்து உ.பி.யிலும்- பாஜக ஆளும் மாநிலங்களிலும் செலவழிப்பதுதான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி. தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. அதற்கும் பாஜக அரசு ஒன்றும் பங்களிப்பு செய்திடவில்லை. ஏதாவது ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்தால்கூட ஆந்திரா, கர்நாடகா பயன்பெற்று அதில் மீதி தமிழ்நாடு பயன்பெறும் வகையில்தான் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டதே தவிர, தமிழ்நாட்டிற்கு என்று பிரத்தியேகமாக எந்த நெடுஞ்சாலை சிறப்புத் திட்டத்தையும் அளிக்கவில்லை.
“மூழ்கும் கப்பலாக” இருக்கும் பா.ஜ.க. இன்னும் எத்தனைக் கற்பனை கதைகள், ஏவல் படைகளுடன் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு எம்.பி சீட்டைக் கூட கொடுக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசாங்கம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இது அப்பட்டமான பொய். மன்மோகன்சிங் போன்ற நேர்மையான, நியாயமான பிரதமராக ஒரு காலத்திலும் மோடி இருக்க முடியாது. பா.ஜ.க தமிழகத்திற்கு துரும்பு கூட செய்யவில்லை.
இதைவிட அப்பட்டமான பொய் காமராஜர், மூப்பனார் பிரதமராக வருவதை தி.மு.க. தடுத்ததாக கூறியுள்ளது. காமராஜர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட விரும்பாமல் இந்திராகாந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரை பிரதமராக்கினார்.
தற்போது கருணாநிதி, முரசொலி மாறன் உயிரோடு இல்லை. ஆனால் அப்போது கருணாநிதி, மாறனை அனுப்பி மூப்பனாரிடம் பிரதமர் பதவி விருப்பம் குறித்து கேட்ட போது, அதற்கு மூப்பனார் கடுமையாக மறுத்துவிட்டார். லாலுபிரசாத் யாதவ் நேரடியாக மூப்பனாரிடம் பேசிய போது, பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்லக்கூடாது" என்று கூறினார்.
திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசுகையில், தமிழரை பிரதமர் ஆக்குவோம் என அமித்ஷா பேசியுள்ளது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். அமித்ஷாவின் ஏமாற்று பேச்சை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.