ஈரோட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக சென்ற சீமானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.
பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
அண்மை காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசி வருவதால் சீமானுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை, நீலாங்கரையில் இருக்கும் சீமானின் வீட்டின் முன்பு பெரியாரிய இயக்கவாதிகள், மே 17 இயக்கத்தினர் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமான் பரப்புரை மேற்கொள்ளும் போது அசம்பாவிதங்கள் ஏற்படும் என்று கருதிய காவல்துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறிப்பாக, சீமான் தங்கியிருந்த விடுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று இரண்டாம் நாளாக சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, சீமானின் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வந்த தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோஷம் எழுப்பியவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.