நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியில் உள்ள மொத்த இடங்களையும் கொத்தாக வென்று திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. அதனால், கூட்டணி கட்சிகளுக்கு மிகக் குறைவான இடங்களே ஒதுக்க திட்டமிட்டுள்ளதால் எத்தனை சீட் என்று எதிர்பார்புகள் எழுந்துள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துவதில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மும்முரமாக உள்ளனர். தமிழகத்தின் இருபெரும் திராவிட கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு, வார்டுகளை ஒதுக்குவதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக தனது கூட்டணியில் உள்ள பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் திங்கள்கிழமை மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களைக் கேட்டதற்கு திமுக 10 இடங்களுக்கு மேல் தர முடியாது என்று கறாராகக் கூறிவிட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி 17 வார்டுகளிலும் போட்டியிட தீவிரம் காட்டி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், அங்கே காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் இல்லாததால், முதலில் 8 இடங்கள் வழங்கியதாகவும் பின்னர் 9 இடங்கள் என அதிகரித்ததாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதுமட்டுமில்லாமல், கோவை மாவட்டத்தில் அரசியல் ரீதியாக தனது இருப்பை அதிகரிக்க திமுக விரும்பியதால், இம்முறை அதிக வார்டுகளில் போட்டியிட விரும்புகிறது.
சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 4 வார்டுகளும், ம.தி.மு.க.வுக்கு மூன்று வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 வார்டுகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா ஒரு வார்டுகளும் வழங்க திமுக திட்டமிட்டிருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு 25 வார்டுகளுக்கு மேல் ஒதுக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதால், திமுக களம் திமுக எதிர்ப்பு முகாமில் களம் மாறியுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 100 வார்டுகளிலும் போட்டியிடுவதில் பாஜக தீவிரம் காட்டி வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக முகாமைப் பொறுத்தவரை, 100 வார்டுகளில் 99 வார்டுகளில் அக்கட்சி போட்டியிடும், ஒரு வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்த முறை திமுக கோவை மாநகராட்சி மேயர் பதவியை மட்டுமல்ல, கவுன்சிலில் பெரும்பான்மையாக வெற்றி பெற வேண்டும் என்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. கோவையில் உள்ள மொத்த இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவுக்கு முக்கிய இலக்காக உள்ளது. ஏனென்றால், கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக இடங்களிலும் பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றது.
இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கொவையைத் தட்டித் தூக்குமா என்ற எதிர்ப்பார்ப்புகளும் கேள்விகளும் எழுந்துள்ளன. அதனால், திமுக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களையே ஒதுக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.