தி.மு.க- வி.சி.க இடையே எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை. தி.மு.க- வி.சி.க ந்த சிக்கலும் எழாது, சிக்கல் எழுவதற்கும் வாய்ப்பு இல்லை என்று கூறிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் எனக் கூறினார்.
கடந்த சில நாட்களாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க, தி.மு.காவை மறைமுமாக தாக்கும் வகையில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு, ஆட்சி அதிகாரம் பற்றி திருமாவளவன் வீடியோ அதோடு, வி.சி.க துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா அதிகாரப் பகிர்வு, துணை முதல்வர் பதவி குறித்து தொடர்ந்து பேசி தி.மு.கவை விமர்சிக்கும் வகையில் பேசி வந்தது கூட்டணியில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று (செப்.25) கோவை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எந்தச் சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.
என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து விட்டது. அதனால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழுதாது; எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசி முடிவு எடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி உள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“