கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று விவகாரத்தில், மத்திய மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களில் முரண் உள்ளதாகக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், மத்திய அரசுக்காக காத்திருக்காமல் தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிகைகள் தொடர்பாக, மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின.
மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்றில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா நோய்த்தொற்றில் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது.
திமுகவின் கூட்டணி கட்சி தலைவர் திருமாவளவன் பாண்டிச்சேரியில் உள்ளார். ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் சமூக விலகலை கடைபிடித்து வருகிறார். அதே போல, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். இதனால், திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் நேரடியாக கலந்துகொள்வார்களா அல்லது வீடியோ கன்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.