நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை சமர்பிக்கலாம் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தி.மு.க ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 19-02-2024 முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 01-03-2024 முதல் 07-03-2024 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“