2025-ம் ஆண்டு புத்தாண்டின் முதல் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் இன்று (ஜன.6) தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், உரை நிகழ்த்த ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவைக்கு வந்தார்.
ஆனால் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்த வேகத்தில் வெளியேறினார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையானதை அடுத்து திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக சார்பில் நாளை(ஜன.7) மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரை கண்டித்து நாளை(ஜன.07) காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மத்திய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் ஆளுநர் அத்துமீறுகிறார். மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது