சென்னை வடக்கு, மேற்கு மாவட்டங்களை திமுக நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென் மேற்கு மாவட்டம் என பிரிந்து அவற்றுக்கான தொகுதிகளையும் மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலத்தில் ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணிக்கு அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பது, தேர்தல் ஆலோசனைக் கூட்டம் என்று வேகமாக ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில், திமுக சென்னை வடக்கு மாவட்டத்தை தனது நிர்வாக வசதிக்காக சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு மாவட்டங்கள் என பிரித்து அந்த மாவட்டங்களுக்கான சட்டமன்றத் தொகுதிகளை அறிவித்து மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “சென்னை வடக்கு மாவட்டம் கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் சென்னை வடக்கு – சென்னை வட கிழக்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் மாதவரம் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சென்னை வடக்கு மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் அடக்கும்” என்று அறிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் சென்னை வடகிழக்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக மாதவரம் எஸ்.சுதர்சனமும், சென்னை வடக்கு மாவட்டத்துக்கு பொறுப்பாளராக தா.இளைய அருணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதே போல, திமுகவில் சென்னை மேற்கு மாவட்டத்தை அதன் நிர்வாக வசதிக்காக சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென்மேற்கு மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டத்தில் சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் சென்னை தென் மேற்கு மாவட்டத்தில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும் என்று திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னை மேற்கு மாவட்டத்துக்கு நே.சிற்றரசுவும், சென்னை தென் மேற்கு மாவட்டத்துக்கு மயிலை த.வேலு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதே போல, திமுகவில் நிர்வாக வசதிக்காக தஞ்சை வடக்கு தஞ்சை தெற்கு மாவட்டங்களை தஞ்சை வடக்கு மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம் மூன்றாக பிரித்துள்ளது.
இதில், திமுகவில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் திருவிடை மருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் தஞ்சை மத்திய மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் தஞ்சை வடக்கு மாவட்டத்துக்கு சு.கல்யாணசுந்தரம் பொறுப்பாளராகவும் தஞ்சை மத்திய மாவட்டத்துக்கு துரை.சந்திரசேகரன் பொறுப்பாளராகவும், தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு ஏனாதி ப.பாலசுப்ரமணியம் பொறுப்பாளராகவும் நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இவ்வாறு திமுக தலைமை நிர்வாக வசதிக்காக சென்னை, தஞ்சாவூர் மாட்டங்களை பிரித்து அவற்றுகான நிர்வாகிகளை நியமித்துள்ளது. இதே போல, அண்மையில், அதிமுகவிலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர் என்ற அளவில் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.