தி.மு.கவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டு உள்ளதாக கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. இதன் காரணமாகவே கேஎஎன் நேருவுக்கு திமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-26T101454.215-300x200.jpg)
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர். 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். திருச்சியில் திமுகவின் முக்கியதலைவராக கே.என்.நேரு திகழ்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழக போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டவர். அவர் நான்கு முறை சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். இவற்றில், லால்குடி தொகுதியில் இருந்து 2 முறையும், திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து 2 முறையும் சட்டசபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
தி.மு.கவின் தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் எம்.பி-யாகவும் இருக்கிறார். ஒருவரிடமே இரு பதவிகள் இருப்பதால். டி.ஆர்.பாலு இருக்கும் இடத்தில் கே.என்.நேரு அமர்த்தப்படலாம் என்ற பேச்சு ஏற்கெனவே அடிபட்டது.
இந்தநிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார். முரசொலியில் வெளியாகியிருக்கும் அந்த அறிவிப்பில், `தி.மு.க முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவரும் டி.ஆர்.பாலு, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால், அவருக்குப் பதிலாக கே.என்.நேரு எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கே.என்.நேரு வகித்துவந்த மாவட்டச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ்பொய்யாமொழிக்கு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.