அ.தி.மு.க.,வின் தூத்துக்குடி வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி 8-ம் வகுப்புக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சித்த மருத்துவராகப் பணியாற்றியதாகக் கூறி, அவரது வேட்புமனுவை ரத்து செய்யக் கோரி தி.மு.க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் மாவட்ட தேர்தல் அதிகாரி வேலுமணியின் ஆவணங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டார்.
சிவசாமி வேலுமணியின் வேட்புமனுவை எதிர்த்த தி.மு.க வழக்கறிஞர்கள், சிவசாமி வேலுமணி கல்வித் தகுதியை 8ஆம் வகுப்புத் தேர்ச்சி என அறிவித்துள்ளார், ஆனால் சமூக வலைதளங்களில் டாக்டர் என்று கூறி சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார் என்று குற்றம் சாட்டினர். புத்தூர் கட்டு எனும் பாரம்பரிய எலும்பு சிகிச்சை முறை குறித்து சிவசாமி வேலுமணி உரை நிகழ்த்திய வீடியோக்களையும் தி.மு.க.,வினர் தேர்தல் அதிகாரியிடம் காட்டினர்.
சிவசாமி வேலுமணியின் வேட்புமனுவின்படி, சிவசாமி வேலுசாமி இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியலில் (DNYS) டிப்ளமோ பெற்றுள்ளார். வடபழனியில் புத்தூர் கட்டு எலும்பு அமைப்பு மற்றும் கூட்டு மையத்தை நடத்தி வருகிறார். ஆனால், டிப்ளமோ படிக்க குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறினர்.
அதேநேரம், அ.தி.மு.க வேட்பாளரான சிவசாமி வேலுமணி யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறிய அவரது தரப்பு வழக்கறிஞர்கள், அவரிடம் இளங்கலை சித்த மருத்துவம் (BSMS) படித்த டாக்டர்கள் 6 பேர் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து சிவசாமி வேலுமணியின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டார்.
தூத்துக்குடியில் சமர்ப்பிக்கப்பட்ட 53 வேட்புமனுக்களில் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 31 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தூத்துக்குடியில் தி.மு.க சார்பில் கனிமொழி கருணாநிதி, அ.தி.மு.க சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜ.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலன், நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் ரோவினா ரூத் ஜேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“