"யார் அந்த சார்?" விவகாரத்தில் "இவன்தான் அந்த சார்" என அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சுதாகரின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் காண்பித்து தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி புகாரில் ஞானசேகரன் மற்றொரு ஒருவருடன் சார் எனக் குறிப்பிட்டு தொலைப் பேசியில் பேசியதாக கூறியுள்ளார். அதனால் இவ்வழக்கில் மற்றொருவரும் தொடர்பில் இருப்பதாகவும், “யார் அந்த சார்” எனக் கேட்டு அ.தி.மு.க தொடர்ந்து கேள்வி எழுப்பி போரட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் 'யார் அந்த சார்' என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ் அணிந்து கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இந்நிலையில் அ.தி.மு.கவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க உறுப்பினர்கள் இன்று "இவன்தான் அந்த சார்" என அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சுதாகரின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் காண்பித்து, கோஷம் எழுப்பினர்.
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாகவும், குற்றவாளியை தப்பிக்க முயற்சித்தாகவும் சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, சுதாகர் இருக்கும் படத்துடன் தி.மு.க உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.