DMK's Bank Balance revealed in affidavit of Lok sabha Election 2019: கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் திமுகவின் வரவு செலவு கட்சி நிதிநிலை பற்றி தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் அதன் நிதி நிலை மற்றும் தேர்தல் செலவுகளை தெரிவித்துள்ளது.
கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவின் தேர்தல் வரவு செலவு மற்று நிதிநிலையை தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள் இன்று தமிழக அரசியலில் மட்டுமில்லாமல் தேசிய அரசியலிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில் ஒன்று திமுகவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது; அந்த வங்கிகளில் திமுகவுக்கு எவ்வளவு பணம் இருப்பு உள்ளது; திமுகவிடம் கையிருப்பு ரொக்கமாக எவ்வளவு உள்ளது என்பது போன்ற விவரங்கள் பேசப்பட்டுவருகிறது.
இன்று அரசியலில் வலிமையாக செயல்படுவதற்கு அரசியல்வாதிகளுக்கு மட்டுமில்லாமல் அரசியல் கட்சிக்கே பணம் அவசியம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவும் தனது நிர்வாக செலவுகளுக்காக எந்தெந்த வங்கியில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளது என்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பதிவேற்றியுள்ளது.
அதன் அடிப்படையில், “திமுகவிடம் 28 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் கையிருப்பாக ரொக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே போல, தேனாம்பேட்டை இந்தியன் வங்கி கிளையில் திமுகவின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையாக 128 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 343 ரூபாய் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆர்.ஏ.புரம் இந்தியன் வங்கி கிளையில் உள்ள திமுக பெயரில் நிரந்தர வைப்புத்தொகையாக 11 கோடியே 78 லட்சத்து 35 ஆயிரத்து 839 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போல, திருவல்லிக்கேணியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் திமுகவுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக 3 கோடியே 58 லட்சத்து 80 ஆயிரத்து 194 ரூபாய் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கரூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள திமுக பெயரில் 2 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தேனாம்பேட்டை இந்தியன் வங்கி கிளையில் திமுகவின் வங்கி கணக்கில் 4 கோடியே 70 லட்சத்து 74 ஆயிரத்து 901 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவிடம் மொத்தம் 148 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 277 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் முடிவுக்கு வந்த நாள் வரை திமுக தலைமையகம் பல்வேறு ஆதாரங்கள் மூலம் பணமாக 1 லட்டத்து 4 ஆயிரத்து 977 ரூபாயும் காசோலை மற்றும் வரைவோலை மூலமாக 50 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 200 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் முடிந்த பிறகு திமுகவின் வங்கிகணக்கில் நிரந்தர வைப்புத் தொகை உள்பட 119 கோடியே 54 லட்சத்து 11 ஆயிரத்து 972 ரூபாய் உள்ளதாக குறிக்கப்பிடப்பட்டுள்ளது.