திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு கொண்டாடும் முதல் பிறந்தநாளில், அண்ணா அறிவாலயத்தில் குவிந்த திமுக தொண்டர்கள், பலாப்பழம், பூஸ்ட், ஆடு போன்றவற்றை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை மார்ஸ் 1ம் தேதி கொண்டாடினார். பிறந்தநாள் விழாவுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 28ம் தேதி தனது சுயசரிதை நூலான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடிய திமுகவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசுகள் வழங்க மார்ச் 1ம் தேதி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர். மு.க.ஸ்டாலினுக்கு 1 டாலர் அமெரிக்க கரன்சிகளை மாலையாக அணிவித்தும், பலாப்பழம், ஒரு பாட்டில் பூஸ்ட் மற்றும் ஆடு போன்றவற்றை பிறந்தநாள் பரிசுகளாக அளித்து வாழ்த்து தெரிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தொடங்கியதில் இருந்து மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளின்போது தொண்டர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். மூன்றாவது அலையில் புதிய கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைத்ததைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 69 வது பிறந்தநாளில் தொண்டர்களைச் சந்திக்க முடிவு செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரைப் பார்க்க காலை முதலே அண்ணா அறிவாலயத்தில் திரளான திமுக தொண்டர்கள் குவிந்தனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசு அளிக்க சிலர் ‘லவ் பேர்ட்ஸ்’களைக் கொண்டு வந்தனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட வந்திருந்த திமுக தொண்டர் ஒருவர் கூறுகையில், “எங்கள் தலைவர் பரிசுகளாகப் பெறும் புத்தகங்களை கிராமங்களில் உள்ள பல நூலகங்களுக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறார். எனவே, திராவிட வரலாறு குறித்த புத்தகங்களை எங்கள் தலைவருக்கு வழங்குகிறேன்” என்று கூறினார்.
திமுக தொண்டர்கள் பலரும் பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற திராவிடக் கட்சித் தலைவர்கள் பற்றிய புத்தகங்களை பரிசளிக்க புத்தகங்களுடன் வந்திருந்தனர். சிலர் தெய்வப் புலவர் திருவள்ளுவர், புத்தர் மற்றும் மூத்த திமுக தலைவர்களுடைய மரத்தால் செதுக்கப்பட்ட சிலைகளை பரிசாக அளித்தனர்.
இதனிடையே, திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் உள்ள புது ஏரி ஏரிக்கரையில் திமுக இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்து எம்.கே.எஸ் என்ற எழுத்துகளை உருவாக்கினர். ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"