/indian-express-tamil/media/media_files/mbv7KrOCLgfW6cf2gNlj.jpg)
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் ஓரிரு தொகுதிகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்த போதிலும் இறுதியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி பெற்றி பெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் ஓரிரு தொகுதிகளில் திமுக கூட்டணி பின்னடைவைச் சந்தித்த போதிலும் இறுதியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.
இதில் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் 3-ஆம் இடத்தில் இருக்கின்றார். திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது பேசும் பொருளாக அமைந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் அருண் நேரு 6,03,209 வாக்குகளைப் பெற்று 3,89,107 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 2,14,102 மட்டுமே பெற்றார். இதில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஐஜேகேவின் பாரிவேந்தர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு டெபாசிட்டையும் இழந்தார்.
மிகப் பெரிய வெற்றியை அருண் நேரு பதிவு செய்துள்ள நிலையில், இந்த அருண் நேரு வேறு யாரும் இல்லை திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவின் மகன் தான்.
40 வயதான இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள பிராட்லி பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது மனைவி தீபிகா மருத்துவராக இருக்கிறார்.
கல்லூரி படிப்பை முடித்து இந்தியா திரும்பிய இவர் அதன்பிறகு, விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம் உள்ளிட்ட தொழில்களைக் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் திமுகவில் இருந்தாலும் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை. மேலும், அவர் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை நேரடி அரசியலிலும் ஈடுபட்டதில்லை.
இருப்பினும், திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே கே.என்.நேருவின் நிழலாகவே இருந்துள்ளார். கட்சி மற்றும் நிர்வாகம் சார்ந்து நேரு சார்பில் பல விஷயங்களை இவரே கவனித்து வந்தார். இந்தச் சூழலில் கடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே இவர் வேட்பாளராகக் களமிறக்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
அதன் பின்னரே இந்த முறை அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
முதல்முறையாக நேரடி அரசியலிலும், தேர்தல் களத்திலும் இறங்கியிருந்தாலும், தி.மு.க-வின் மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் மகன் என்பது, அருண் நேருவுக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது.
அதேபோல், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதும், அவருக்கு தெம்பைக் கொடுத்தது.
அதே நேரம், அருண் நேரு தொகுதியில் அதிமாக உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது அவருக்கு பின்னடைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சந்திரமோகன் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், இரட்டை இலை சின்னத்தில் நின்றதும் ஆரம்பத்தில் அவருக்கு ஏற்றம் தரும் விசயங்களான பார்க்கப்பட்டன. ஆனால், கே.என் நேரு அந்த சமூகத்தைச் சேர்ந்த இலைக்கட்சி நிர்வாகிகள் சிலரை 'பசை' போட்டு இழுத்ததால், அருண் நேருவுக்கு சமூக வாக்குகளால் ஏற்பட இருந்த பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்தது.
அதேபோல், கடந்தமுறை தி.மு.க கூட்டணியில் நின்று வென்ற ஐ.ஜே.கே பாரிவேந்தர் தொகுதியில் தலைகாட்டவே இல்லை என்று மக்கள் எதிர்ப்புக்கு ஆளானதால், 'செழுமையான' முயற்சிகள் மேற்கொண்டாலும், அவரால் இரண்டாம் இடம் கூட வரமுடியவில்லை.
தனது மகன் அருண் நேரு வெற்றிக்காக அந்த தொகுதியில் அதிகம் பிரசாரம் மேற்கொண்டார் கே.என்.நேரு. அதோடு, தொண்டர் படையை களமிறக்கிவிட்டு டோர் டு டோர் பிரசாரம் மேற்கொள்ள வைத்தார். வாக்காளர்களை 'குளிர்'விப்பதிலும் கோட்டைவிடாமல் ஜமாய்த்தது தி.மு.க தரப்பு.
அதே நேரம், தொகுதியில் அதிகம் உள்ள முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 'கே.என்.நேரு தொடர்ந்து இந்த தொகுதியில் முத்தரையர் சமூக பிரமுகர்களை ஓரங்கட்டுகிறார். தி.மு.க-வில் முக்கியப் பொறுப்புகளில் தான் சார்ந்த சமூகத்தினரையே நியமிக்கிறார்' என்றெல்லாம் தகவல் பரப்பி கச்சைக் கட்ட, அதை சமாளிக்க அவர் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது.
உதயசூரியன் சின்னம், கூட்டணி பலம், தனது தந்தையின் பாய்ச்சலான தேர்தல் வியூகம், கடைக்கோடி வரை காட்டிய 'தாராளம்' உள்ளிட்ட விசயங்களால், அருண் நேரு தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அமோகமாக வெற்றிப்பெற்றிருக்கிறார்.
சொந்தக் கட்சியினரே தனக்கு குழிப்பறித்ததால், இரண்டாம் இடம் பெற்றுள்ளார் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரமோகன். கடந்த முறை திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் வலு'வான விட்டமின் பசை நிறைந்த வேட்பாளராக இருந்தாலும், தொகுதியில் அவரது கட்சிக்கோ, பா.ஜ.க-வுக்கோ செல்வாக்கு இல்லாதது, கடந்தமுறை எம்.பி-யாக எதையும் சாதிக்காமல் கோட்டைவிட்டது உள்ளிட்ட மைனஸ்களால், ஐ.ஜே.கே பாரிவேந்தரால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.