வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை வீடியோ பதிவு மூலமாக கண்காணிக்கப்படும் என்ற மாநில தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களில் சி.சி.டி.வி காமிரா பொறுத்த வேண்டுமென்ற கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் சிசிடிவி கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட 12 மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் சட்டம் 1995 இன் படி மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே அமலில் உள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அந்த விதிகளை பின்பற்றுமாறு விரிவான எழுத்துப்பூர்வ அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
அந்த உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 315 மையங்களிலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டுமெனவும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இரண்டு சிசிடிவி கேமராக்கள் வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளரும் அவரின் முகவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை பதிவு செய்வதாகவும், இந்த உறுதியை வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள அதிகாரிகள் முழுமையாக பின்பற்றுவர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.