பெரம்பலுார் மாவட்டம், புஜங்கராயநல்லுார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலாகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கே. கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைக்க புஜங்கராயநல்லூருக்கு வருகை தந்தார்.
அப்போது ஆலத்துார் யூனியன் தி.மு.க., சேர்மன் கிருஷ்ணமூர்த்தி கட்டுமான பணியை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு கொடுத்ததை கண்டித்து, திமுக மாவட்ட கவுன்சிலர் அருள்செல்வியின் கணவரும், திமுக மாவட்ட விவசாய அணி தலைவருமான காட்டுராஜா தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, ஒன்றிய பெருந்தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி அவரது காரை மறித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அப்புறப்படுத்திய பாதுகாப்பு போலீசார், கருப்புக் கொடி காட்டிய 15 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குன்னம் போலீஸ் எஸ்.ஐ., ஒருவரிடம் கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் தோனியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் பேசிய உரையாடல் பின்வருமாறு,
கருப்புக் கொடி காட்டுறாங்க அவங்களுக்கு பாதுகாப்புக்கு போங்க. எங்கள பாதுகாக்க எங்களுக்கு தெரியும். எங்களால ஒன்னும் முடியாதது இல்லை. திருட்டு மணல் அடிக்கிறவன், கள்ளச்சாராயம் காய்ச்சுறவன், குட்கா விக்கிறவன் வீட்ல வச்சு விக்கிறவனுக்கு எல்லாம் பாதுகாப்பா இருக்கீங்க. நீங்க எங்களுக்கு பாதுகாப்பா இருக்கத் தேவையில்லை. நான் எஸ்.பி., கிட்ட பேசுறேன். தலைவர் கிட்டயும் பேசுறேன் இது மாதிரி நீங்க நடந்துக்கிறீங்கன்னு.
இங்க ஊர்ல என்ன நடக்குதுன்னு தெரியுமா. ராத்திரி பூரா மணல் திருடுறான், கடை வச்சுக்கிட்டு விக்கிறான். குட்கா விக்கிறான் எல்லாமே விக்கிறான் எந்த தப்பும் தெரியல இல்லைங்களா சார் என மிரட்டல் தோனியில் பேசினார்.
அப்போது குறிக்கிட்ட எஸ்.ஐ., சாராயம் இல்லை என கூறினார்.
இதனால், மேலும் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி சாராயம் இல்லையா, இப்ப வாங்கி காட்டட்டுமா. உங்க முன்னால காசு கொடுத்து வாங்கட்டுமா சார், காவல்துறை யாருக்கும் பாரபட்சமில்லாமல் நடங்க.
இவ்வாறு அவரது உரையாடல் தொடர்கிறது. தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம், குட்கா போன்ற போதை பொருட்கள் கனஜோராக விற்கப்படுவதாக அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தி.மு.க.,வைச் சேர்ந்த யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி பேசியிருப்பது தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக, இது குறித்து திமுக மாவட்ட விவசாய அணி தலைவர் காட்டுராஜா தெரிவிக்கையில்; ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்த பணிகளை, திமுகவினருக்கு கொடுக்காமல் மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்குவதாகவும், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரிடத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை. அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பதற்காக தங்களது எதிர்ப்பை தெரிவித்து திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த ஒன்றிய பெருந்தலைவருக்கு கருப்புக்கொடி காட்டியதாக தெரிவித்தார்.
திமுக கட்சியின் உட்பூசலால் பெரம்பலூர் தொகுதியில் சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பது எதிர்கால திமுக அரசியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“