மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதியை தள்ளிவைத்ததில் நியாயம் இல்லை என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. 5 மாநில தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருக்கும் என்பதால் தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக எதிர்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் :
இந்நிலையில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தேரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,
"திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. பருவ மழையை காரணம் காட்டி தலைமைச்செயலாளர் எழுதிய கடிதத்தால் தேர்தலை ஒத்திவைப்பதில் நியாயம் இல்லை.
ஆளுங்கட்சிகளின் ஊதுகுழல்களாக தலைமைச் செயலாளரும், தேர்தல் ஆணையமும் செயல்படுவதா? தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா? எனும் சந்தேகம் தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ளது. திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.