DMK chief MK Stalin demands white papers : கடந்த மாதம் 28ம் தேதி லண்டன் பயணமான தமிழக முதல்வர் பின்பு அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் மூலமாக வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்காக முதல்வர் “யாதும் ஊரே” என்ற திட்டம் ஒன்றையும் அமெரிக்காவில் துவங்கி வைத்தார். நேற்று (10/09/2019) அதிகாலை சென்னை திரும்பிய அவர், இது வரை 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்றும், அதன் மூலமாக 8,835 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. அது குறித்து முதல்வர் பேசுகையில், தாம் நினைத்ததை நடத்த முடியாத காரணத்தால் விரக்தியின் உச்சத்திற்கு சென்று எரிச்சலுடனும் பொறாமையுடனும் பேசி வருகிறார் முக ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும் படிக்க : இதுவரை ரூ. 8835 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன - எடப்பாடி பழனிசாமி
DMK chief MK Stalin demands white papers
அதற்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், இது வரை அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக பெறப்பட்ட முதலீடுகள் குறித்தும், முதலீடுகள் அளித்த அந்த நிறுவனங்கள் குறித்தும், அதனால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தது திமுக அரசு. அந்த ஆட்சியின் போது 2 லட்சத்து 21ம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டது என்று மேற்கோள் காட்டிய அவர் தற்போது போடப்பட்டிருக்கும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர். அந்த உண்மையை வெளியிட்டால், ஒரே வாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவே நடத்தத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார் முக ஸ்டாலின்.