ஏழை எளிய மக்களுக்கு உதவாத பட்ஜெட்டாகவே இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2019 அமைந்துள்ளது என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் 9வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிதார். தேர்தல் நெருங்க இருக்கும் காரணத்தால் மத்திய பட்ஜெட் போலவே தமிழக பட்ஜெட்டிலும் முக்கிய கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மு.க. ஸ்டாலின் பேட்டி
இன்றைய பட்ஜெட் உரை நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில்,
“சங்கீத வித்துவான் பாடுவது போலவே ஓ. பன்னீர்செல்வம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த பட்ஜெட் என்பது ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வளர்ச்சிக்குச் செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கிய கடனுக்கு வட்டியைச் செலுத்துவதை தான் இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக தமிழ்நாடே இன்று போராட்டக்களமாக இருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்று சொன்னால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடக்கூடிய சூழ்நிலை உருவாகி, அதனால் அவர்கள் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டது.
தமிழக பட்ஜெட் குறித்த முழு செய்திக்கு இதை கிளிக் செய்யவும்
இந்த அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இந்த அரசு ஏற்கனவே இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இரண்டு குழுக்களை அமைத்து, அந்தக் குழுக்களும் முறையான ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கையை அரசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். ஆனால் ஒப்படைக்கப்பட்டது என்ன? அதை எப்படி இந்த அரசு நிறைவேற்றப்போகிறது என்பது பற்றி இந்த பட்ஜெட்டில் சொல்லாமல் இருப்பது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிடைத்த ஏமாற்றம்.

அது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்கான எந்த அறிவிப்பும் எந்த நிலையீடும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தவரையில், ஒரு கோடி இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலையில்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்திருக்கக் கூடிய சூழலில், அது பற்றிய அறிவிப்பு இல்லாதது பெருத்த ஏமாற்றம்.

சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன். ஆக வருவாயைப் பெருக்குவதற்கு இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாநில அரசினுடைய கடன், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகமாகி, நிதி மேலாண்மை ஒரு மோசமான தோல்வியை சந்திக்கக்கூடிய நிலைமையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது. முந்தைய ஆட்சியில், அதனைத் தொடர்ந்து எடப்பாடி ஆட்சியில் எப்படி வெறும் அறிவிப்புகளை மட்டும் தெரிவித்துக் கொண்டிருந்தார்களோ; அதே போல தான் ஏட்டுச்சுரைக்காயாக இந்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது.
நிதி ஒதுக்கீடு விளம்பரத்திற்காகச் செய்துவிட்டு, அதைச் செலவே செய்யாமல் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய தோல்வியை இந்த அரசு அடைந்திருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைப் பற்றி பட்ஜெட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
2017 - 18ம் ஆண்டிலே உள்ளாட்சி அமைப்புக்கு 560 கோடி ரூபாயும், 2018-19ம் ஆண்டில் 3, 852 கோடி ரூபாயும் வர வேண்டும், எதிர்பார்க்கிறோம் என்று வெளியிட்டிருக்கிறார்கள். எதற்காக இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், ஏன் மத்திய அரசு இந்த நிதியை மாநில அரசுக்கு இதுவரை வழங்கவில்லை என்று சொன்னால், உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலை இந்த அரசு நடத்த முன்வரவில்லை.
ஆகவே இன்றைக்கு இந்த உள்ளாட்சி அமைப்புக்கள், சீரழிந்த நிலையிலே சென்று கொண்டிருக்கிறது என்பதை திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தைக் கூட்டுகிற நேரத்தில் அவற்றையெல்லாம் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுவதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. விவசாயிகளைப் பற்றியும் இந்த அரசு கவலைப்படவில்லை.
நெல் கொள்முதல் குறைந்த விலையில் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கு அதார் விலையை உயர்த்தவில்லை. எனவே பட்ஜெட் பொருத்தவரை ஒரு திவாலான கம்பெனி போல இருக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், கொடநாட்டில் எப்படிக் கொள்ளையடித்தார்களோ அதே போல் தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கக்கூடிய வகையில் தான் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.” என்றார்.