கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினால் கவலை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற்ற தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில், கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதே அரசியல் கட்சிகளின் கூட்டணியே போட்டியிட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆளும் அதிமுக கூட்டணியைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணி கட்சியினரான திமுகவினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அண்மையில், டெல்லியில், காங்கிரஸ் கட்சி தலைமையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதான கூட்டணி கட்சியான திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று கூறியது இதனை மேலும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் ஊடகங்களிடம் பேசுகையில், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினாலும் கவலை இல்லை என்று கூறினார்.
மேலும், துரைமுருகன் கூறுகையில், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகிப்போனால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டுப் போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று டி.ஆர்.பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” என்று அதிரடியாக கூறினார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “தற்போதுகூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன்.” என்று கூறினார்.
Why didn’t this wisdom dawn before the Vellore parliamentary bye election? @DuraimuruganDmk @dmkathiranand pic.twitter.com/8OzD6ZWDy2
— Karti P Chidambaram (@KartiPC) January 15, 2020
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு சரியாகிவிட்டது என்று கருதிய நிலையில், சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில், துரைமுருகன் பேசிய வீடியோவை பதிவிட்டு, வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.