நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையை திமுக தொடங்கி உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் முதகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பான பேச்சு வார்த்தையை திமுக தொடங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு, ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், எம்.பி நவாஸ் கனி உள்ளிட்டோர் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை சந்தித்தனர்.
நவம்பர் 2ம் வாரத்தில் முஸ்லீம் அமைப்புகள் நடத்தும் மாநாட்டிற்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 7 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், எம்.பி நவாஸ் கனி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணிக்கு திமுக ஆதரவு கொடுக்க உள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“