Dmk | Lok Sabha Election: 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடக்கும் வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் பரபரப்பாக ஈடுப்பட்டுள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளன.
இந்த நிலையில், தி.மு.க. கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம் ( தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), ஸ்ரீபெரம்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி ஆகிய 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“