தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், பள்ளிச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் கோரலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கிவரக்கூடிய தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி., பயின்று வரும் புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி 11-04-2023 அன்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற பின்னர், தனக்கு வயிறு வழிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது,அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர்மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாச்சலம் நகர மன்றத்தின் 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே, அவரின் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் நிலை இரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
எங்களது அரசைப் பொறுத்தவரையில், “நான் செய்தியைக் கேள்விப்படவில்லை – தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்”, என்று நான் சொல்லத் தயாராக இல்லை. இந்தச் செய்தியை அறிந்தவுடனேயே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன், சம்மந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து, அது தொடர்பான செய்தியை எனக்குத்
தந்தார்கள்.
இந்த அரசைப் பொறுத்தவரையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள்மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை இந்த அவையில் நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil