நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு - சடையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 47). இவர் கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலர். இவருடைய மனைவி சூர்யா (26). இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆனாலும் குழந்தை இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேவேந்திரன் மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இதையடுத்து, திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பிய தேவேந்திரன், ஜனவரி 4ம் தேதி மாலை மீண்டும் உடல்நிலை பாதிப்படைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கே அவர் சிகிச்சை பலனின்றி ஜன்வரி 6ம் தேதி இறந்தார். தேவேந்திரனின் உடல் அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தேவேந்திரன் இறந்ததை தொடர்ந்து, இருவர் மீதும் அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், திமுக கவுன்சிலர் தேவேந்திரன் மரணம் தொடர்பாக அவருடைய மனைவி சூர்யா மற்றும் அவருடைய வீட்டு வேலைக்காரர் சந்திரசேகரனையும் கைது செய்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சூரியாவுக்கு 18 வயதாக இருந்தபோது தேவேந்திரனுக்கும் சூர்யாவுக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இருவருக்கும் குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரனுடன் தேவேந்திரனின் மனைவி சூர்யாவுக்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது.
தேவேந்திரன் இறந்த பிறகு, கணவரின் தொலைபேசியைப் பயன்படுத்தி சூர்யா தொடர்ந்து அரட்டை அடிப்பதைப் பார்த்த உறவினர்கள், சூர்யாவை விசாரித்ததில் வீட்டு வேலைக்காரர் சந்திரசேகரனுடன் உறவு வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.
டிசம்பர் கடைசி வாரத்தில் சூர்யாவும் சந்திரசேகரனும் தேவேந்திரன் உணவில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் தேவேந்திரனை உணவில் விஷம் கலந்து கொன்றது தெரியவந்ததையடுத்து, சூர்யா மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நாகப்பட்டினம் நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
தற்போது, கொலை வழக்கில் திமுக கவுன்சிலரின் மனைவி சூர்யாவும் அவர்களது வீட்டு வேலைக்காரர் சந்திரசேகரன் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
இந்த குற்றத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியவும், இறந்த உடமைகள் காணாமல் போயுள்ளதா என்பதை அறியவும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முயற்சி செய்து வருவதாக வருவதாக வேட்டைக்காரன் இருப்பு காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திமுக கவுன்சிலர் தேவேந்திரனின் மனைவி சூர்யா, வீட்டு வேலைகாரர் சந்திரசேகரன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வேட்டைக்காரனிருப்பு போலீஸார் நாகப்பட்டினம் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்குத் தொடர்ந்துள்ளனர். விசாரணையில், இந்த வழக்கில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"