/tamil-ie/media/media_files/uploads/2023/02/Trichy-mayor.jpeg)
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் மண்டலத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் பகுதிக்கான தேவையை முன்வைத்தனர். அப்போது டெண்டர் முறையாக விடப்படவில்லை எனக் கூறியும், அமைச்சர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியின் செலவை மாநகராட்சி ஏன் செய்யவேண்டும் என தி.மு.க அமைச்சருக்கு எதிராக தி.மு.க மாமன்ற உறுப்பினர்களே தி.மு.க மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கலையரங்கம் வளாகத்தில் கடந்த 03.12.2022 அன்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நடத்திய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கான பணிகளை செய்ய ரூ.38.98 லட்சம் செலவிடப்பட்டதற்கு ஒப்புதல் கோரிய தீர்மானம் மாதாந்திர மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் இமேஜ் 6 மாதங்களில் 16% சரிந்து விட்டது: அண்ணாமலை பேட்டி
இந்த செலவு விவரம் குறித்து தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா கமால் கேள்வி எழுப்பினார். அதற்கு, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில், கூட்டத்துக்கான அனைத்து செலவுகளையும் மாநகராட்சியே ஏற்றுக்கொண்டதாக மேயர் விளக்கமளித்தார்.
அப்போது குறுக்கிட்ட தி.மு.க கவுன்சிலர் முத்துச்செல்வம், ‘‘இந்த செலவுகளை ஏன் மாநகராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும். அதற்கெல்லாம் வேறு வழி இருக்கிறது. அதை செய்திருக்கலாமே?’’ என்றார். அப்போது மேயர் ‘‘அது என்ன வழி என கூறுங்கள்'’ என்றார். அதற்கு, ‘‘பிறகு சொல்கிறேன்’' என முத்துச்செல்வம் பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து கவுன்சிலர் காஜாமலை விஜய், ‘‘அமைச்சர் கே.என்.நேரு நடத்திய நிகழ்ச்சியின் செலவை ஏற்பதற்கு இந்தளவுக்கு விவாதம் தேவையா'’ என்றார். அப்போது, ‘‘அமைச்சர் கூட்டத்துக்கான செலவு பற்றி தற்போது பேசவில்லை. கூட்டத்துக்கான செலவுத்தொகை குறித்து அமைச்சருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை'’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதற்கு பதிலளித்த மேயர், ‘‘இங்கு என்ன நடைபெறுகிறது என்ற ஒவ்வொரு விஷயமும் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை உடனுக்குடன் தெரிந்துவிடும். தவறு செய்தால் நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்’' என்றார்.
தொடர்ந்து, தி.மு.க கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசும்போது, “மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும். டெண்டர் தொடர்பான பல விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை. கேட்டால் சரியான பதிலும் அளிப்பதில்லை” என்றார். அப்போது தி.மு.க கவுன்சிலர்களான ராமதாஸ், காஜாமலை விஜய், லீலா உள்பட பல கவுன்சிலர்கள் எழுந்து தங்களது கருத்துகளைக் கூற முற்பட்டதால் நீண்ட நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேயரும் முத்துச்செல்வத்தை ஒருமையில் பேசினார். முத்துச்செல்வம் நான் ஒன்னும் கிள்ளு கீரை அல்ல மாமன்ற கூட்டத்தில் அனைத்தையும் ஒப்புதல் அளித்து செல்வதற்கு என மீண்டும் குரலை உயர்த்தி பேசினார். தி.மு.க கவுன்சிலர்களும் மேயரும் ஒருவரையொருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து மேயர் அன்பழகன் பேசும்போது, “நாளிதழ்களில் விளம்பரம் செய்து, ஆன்லைன் மூலம் வெளிப்படையான டெண்டர்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இனி கவுன்சிலர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் டெண்டர் நோட்டீஸ் வெளியிடப்படும்'’ என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/02/WhatsApp-Image-2023-02-01-at-17.15.13.jpeg)
39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ் (காங்கிரஸ் கட்சி) பேசும்போது, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் மாநகருக்குள் வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே, காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்களை மாநகருக்குள் அனுமதிக்கக்கூடாது. அனைத்து வார்டுகளிலும் 3 இ-சேவை மையம் அமைக்க வேண்டும்.
கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். இதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மாதம் ஒரு முறை ரூ.3 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாநகரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளில் இந்த பணிக்கான செலவு மாமன்ற நிதியில் இருந்து வழங்கப்பட்டது என்று விளம்பரப்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.
பின்னர் மேயர் பேசும்போது; மாடுகளால் மாநகரில் விபத்துகள் அதிகரிப்பதால், சாலையில் திரிந்து பிடிபடும் மாட்டுக்கு ரூ.5 ஆயிரம், கன்றுக்கு ரூ.2,500 வீதம் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க உட்பட பல்வேறு கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் எனக் கோரினர். ஆனால், மாற்றமின்றி, அதே அபராதத் தொகையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் மையப்பகுதியாகவும், ஆளுமை நிறைந்த அமைச்சர்கள் உள்ள திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க அமைச்சர் மற்றும் மேயருக்கு எதிரான குரல்கள் தி.மு.க கவுன்சிலர்களிடமிருந்தே ஓங்கி ஓலிக்கத் துவங்கியிருப்பது என்பது தி.மு.க ஆட்சியின் அவலத்தை எடுத்துரைத்துள்ளது என்கின்றனர் எதிர்கட்சியினை சார்ந்தவர்கள்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.