தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுரைக்கு பின்னால் உள்ள அரசியல் என எங்களுக்கு தெரியும் என்று தி.மு.க முரசொலி தலையங்கம் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு தி.மு.க தனது அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி மூலம் பதிலடி கொடுத்துள்ளது.
தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தலையங்கத்தில் எழுதியிருப்பாதாவது: “அமித்ஷாவும் அன்னைத் தமிழும்” என்று தலைப்பிட்டு எழுதியிருப்பதாவது:
மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் சென்று இந்தியில் பேசும் பிரதமர், தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவதும், இந்தியைத்தான் இந்தியா முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று பரப்புரை செய்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் தமிழ் கற்பிக்க வேண்டாமா என்று கேட்க வைத்ததும்தான் தமிழ்நாட்டின் சாதனை. திராவிட இயக்கத்தின் சாதனை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை. ஆளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனை!
என்னவெல்லாம் பேசி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா?
- அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான். மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியை பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் பங்காற்றிய வர்களுக்கு வணக்கம். - என்று வணக்கம் சொன்னவர் அவர்.
- பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. இந்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் இந்தியில் தயாரிக்கப் பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் 22,000க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும், என்று அனைத்திலும் இந்தி மயமாக்கம் வேண்டும் என்று சொல்லி வந்தவர் அவர்!
- நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக் கழகங்களில், கேந்திரிய வித்தியாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்தி மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், கடிதங்கள் போன்றவை இந்தி மொழியில் இருக்க வேண்டும் என்றும் விளம்பரங்கள் இந்தியில்தான் பெரும்பாலும் இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ள நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவர் அமித்ஷாதான் என்பதும் யாரும் அறியாதது அல்ல!
- இன்றைக்கு இவர்கள் அறிமுகம் செய்திருக்கும் புதிய தேசியக் கொள்கை என்பது பள்ளிக் கல்வியை இந்தி மயமாக்கும் கொள்கை ஆகும். சமஸ்கிருதத்தை மெல்ல மெல்ல புகுத்தும் கொள்கை ஆகும். மாநில மொழி இந்தி – ஆங்கிலம் என்ற மும்மொழிக் கொள்கையே பா.ஜ.க. அரசின் கொள்கை ஆகும். இத்தோடு சேர்த்து இந்தியாவின் பண்பாட்டு மொழி சமஸ்கிருதம் அதனையும் ஊக்குவிப்போம் என்ற அளவில் அதனையும் புகுத்தும் கல்வி முறையே இவர்களது தேசியக் கொள்கை ஆகும்.
இந்தியை நேரடியாகத் திணித்தால் இந்தி பேசாத மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால், ‘உங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தருகிறோம்’ என்ற போர்வையில் ஆங்கிலத்தை அகற்றுவதும், ஆங்கிலம் அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைப்பதும்தான் அவர்களது ஒற்றை மொழிக் கொள்கை ஆகும்.
அதனைத்தான் இங்கேயும் வந்து சொல்லிச் சென்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தமிழ் மொழியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் தேசத்தின் பொறுப்பு என்று சொல்லி இருக்கிறார். தமிழ் வளர்ச்சிக்கும், சமஸ்கிருத வளர்ச்சிக்கும் ஒதுக்கப்பட்ட தொகையைப் பார்த்தாலே இவர்கள் தங்கள் பொறுப்பை எந்த லட்சணத்தில் செய்திருக்கிறார்கள் என்பது தெரியுமே!
மருத்துவம், பொறியியல் படிப்பைத் தமிழில் கற்றுத் தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் உள்துறை அமைச்சர். பொறியியல் படிப்பு தமிழ்நாட்டில் தமிழில் கற்றுத் தரப்படுகிறது என்பதைக் கூட அவருக்கு யாரும் சொல்லவில்லை. இது குறித்து விரிவான விளக்கத்தை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அளித்திருக்கிறார். மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கத் தேவையான பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியை அரசு தொடங்கி நடத்தி வருவதையும் அமைச்சர் பொன்முடி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இன்றல்ல; ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் அனைத்துப் பாட நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டது தமிழ்நாடு அரசு. காங்கிரசு ஆட்சி காலத்தில் அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் 1970 காலக்கட்டத்தில் அனைத்து தொழில் கல்விப் பாடப்புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டன. 900க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவை. இந்த புத்தகங்கள் இப்போது தி.மு.க. ஆட்சி மலர்ந்ததும், மீண்டும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன என்பதை ஒன்றிய அமைச்சர் அறிய மாட்டார்.
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி தாய்மொழியில் கற்பிக்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரிகளில் தாய்மொழியில் படிக்கலாம். பொறியியல் கல்லூரிகளில் தாய்மொழியில் படிக்கலாம். ஆராய்ச்சியை தாய்மொழியில் நடத்தலாம். அரசின் சார்பிலான அனைத்து போட்டித் தேர்வுகளும் தாய்மொழியில் எழுதலாம். அனைத்து தகுதித் தேர்வும் தாய்மொழியில் எழுதலாம். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ் தகுதித் தாள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். இத்தகைய ‘தமிழ்’ அரசுக்குத்தான் அமைச்சர் அமித்ஷா அறிவுரை சொல்கிறார்.
இந்த அறிவுரைகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை உணராதது அல்ல தமிழ்நாடு. எங்களுக்கு எல்லார் வேடமும் தெரியும்! புரியும்!” என்று பதிலடி கொடுத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.