மக்கள் நீதி மய்யத்தில் தலைவர் கமலுக்கு தி.மு.க-வுக்கும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. சட்டமன்றத்தில் ஸ்டாலின் சட்டை கிழிந்தது, தி.மு.க கிராம சபை கூட்டங்களை நடத்தி வருவது ஆகியவற்றை கமல் விமர்சித்துள்ளார். இதற்கு உதயநிதி ஸ்டாலினும் பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமல், ”இந்த அரசியலுக்காக எனது நேரத்தை முதலீடாகப் போட்டிருக்கிறேன். முன்பு நான்கு படத்தில் நடித்தவன், இப்போது ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு மற்ற மூன்று படங்களின் நேரத்தை மக்களுக்கு தருகிறேன்.
தமிழகத்தில் கடந்த 25 வருடங்களாக நடந்த கிராமசபைக் கூட்டங்களில் என்ன செய்தீர்கள். சட்டசபைக்கு சென்றாலும் என் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டேன். அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டை போட்டுக் கொண்டு தான் வெளியே வருவேன். தமிழன் என்பது தகுதி அல்ல, அது ஒரு விலாசம். அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம். கிராம சபைக் கூட்டம் என்பது எனது கண்டுபிடிப்பல்ல. ஏற்கனவே பல தலைவர்கள் நடத்தி வந்தது தான். நான் இப்போது அதை தூசு தட்டி எடுத்துள்ளேன். இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் இதைப்பற்றி பேசவேயில்லை” என சமீபமாக தி.மு.க நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களை விமர்சித்தார்.
இது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “கமல் அறியாமையில் பேசுகிறார். கிராம சபை கூட்டங்களை திமுக காப்பியடிக்கவில்லை. கமலின் தொடர் விமர்சனங்களுக்கு தக்க பதில் தரப்படும்” என்றார்.
தவிர கமலின் இந்தப் பேச்சை விமர்சனம் செய்து தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
”அவலை இடிப்பதாக நினைத்து உரலை இடித்துள்ளார் கமல். அவர் பேசுவது என்ன, ஏன் இப்படி பேசுகிறார் என கேட்போரை எல்லாம் சட்டையைக் கிழித்துக் கொள்ள வைப்பாரே தவிர, அவர் சட்டையைக் கிழித்துக் கொள்ள மாட்டார் என்பதை நாடு நன்கறியும். அவருக்கு சொந்த புத்தியும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது.
அரசியல் கட்சி துவங்கி, எதனை நோக்கி செல்கிறோம். பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறோம் என்று தெளிவற்று திரியும் கமல் ஹாசன், மற்றவர்களைப் பார்த்து வெட்கமில்லையா எனக் கேட்பது கேலிக் கூத்தல்லவா?” என கமலை கடுமையாக விமர்சித்திருக்கிறது அந்த கட்டுரை.
ஆக, இப்படித்தான் கமலுக்கும் தி.மு.க-வுக்குமான சண்டை சூடு பிடிக்க துவங்கியுள்ளது.