தமிழக பாஜகவின் புதிய தலைவர் வேல்முருகன் பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார் என்றும் ராமன் இருந்த இடத்தில் முருகனை வைத்து இருக்கிறார் நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது.
வாஜ்பாய் ஆட்சியில் பாஜகவும் திமுகவும் கூட்டணி வைத்திருந்தாலும் இப்போது பாஜகவும் திமுகவும் சிங்கம் புலியைப் போல எதிரெதிர் நின்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் திமுகவினரும் பாஜகவினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடையில் உருவாக்கியது, பெரியார் சிலை அவமதிப்பு, கந்த சஷ்டி விவகாரம் போன்றவற்றில் கடந்த ஒராண்டாக பாஜகவின் நடவடிக்கைக்கு சமூக ஊடகங்களில் திராவிட இயக்க ஆதாரவாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். திமுகவினரும் பாஜகவை நடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அண்மையில், கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் முருகனை வழிபடும் பாடலான கந்த சஷ்டியை விமர்சித்து வெளியிட்ட வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் பாஜக போராட்டத்தை முன்னெடுத்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேட்டு விமர்சனம் செய்தது. அதோடு, பாஜகவினர் வீடுகளில் முருகக் கடவுள் படத்தை வழிபாடு நடத்தி அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர்.
இந்த நிலையில்தான், திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலியில், “தமிழக பாஜகவின் புதிய தலைவர் வேல்முருகன் பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார். ராமன் இருந்த இடத்தில் முருகனை வைத்து இருக்கிறார் நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது” என்று கட்டுரை வெளியிட்டு எல்.முருகனைப் பாராட்டியுள்ளது. திமுக எல்.முருகனை திடீரென பாராட்டியுள்ளதால் புரியாத புதிராக பாஜகவினர் யோசித்து வருகின்றனர்.
திமுகவின் முரசொலி நாளிதழில் இன்று திமுகவும் தமிழக பாஜகவும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், “திமுகதான் எங்களுக்கு அரசியல் எதிரிகள் என்று தொடர்ந்து பாஜகவினர் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். புதிய இடந்தேடிகள் அதற்குத் தாளம் போடுகிறார்கள். அவர்களோடுதான் எங்களுக்குச் சித்தாந்த போர் என்கிறார்கள். நூற்றுக்கு நூறு சரியான பார்வை அது. அதற்காக அந்த அறைகூவலை நாம் ஏற்கிறோம். எங்கள் அணியைப் போல ஒரு எதிரி உங்கள் கண்ணுக்கு வெகுதூரம் வரை யாரும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதில் எங்கள் பேரு மட்டும்தான் தெரியும். ஆகவே நாங்கள் மிக கீர்த்திக்குரியவர்கள் என்பதை முதலில் நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முரசொலி இதழில், ““தமிழக பாஜகவின் புதிய தலைவர் வேல்முருகன் பாஜகவின் அடையாளத்தையே மாற்றி வருகிறார். ராமன் இருந்த இடத்தில் முருகனை வைத்து இருக்கிறார் நமக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. குறிஞ்சி நில மக்களின் வழிபடு தலைவன் முருகன்.
ஆனால், பாஜக முருகன் ராமரிடத்தில் குறிஞ்சி முருகனை வைப்பதை ஏற்றுக்கொள்கிற போது, நாம் புதிய மாறுதலைப் பெற்று இருக்கின்றோம். இங்கேயுள்ள தமிழர்கள் விநாயகரை ஏற்று வழிபடுபவர்கள் சதுர்த்தியை அப்படி கொண்டாடக்கூடியவர்கள். வடமாநிலத்தவர்கள் முருகனை வழிபடுவது இல்லை. அதற்கு ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜக முருகன். அதற்காக நாம் அவருக்கு நன்றியை தெரிவிக்கின்றோம். ஆனால், ஒரிஜினல் பாஜகவினர் அதற்கு சம்மதிக்க வேண்டுமே. அவர்கள் கணக்கு வேறாயிற்றே!
திமுக இடத்திற்கு வருவதற்கு பாஜக முருகன், ராமனை மறந்துவிட்டு முருகன் கந்தன் என்று பேசுகிறாரா என்றுகூட ஒருவர் தொலைக்காட்சியில் கூறினார். இது மட்டுமல்ல இன்னொரு கதையை அவிழ்த்துவிட்டார்கள். ஒன்றரை இலட்சம் நாயகர் சிலைகள் சதுர்த்தியன்று வழிபடுவதற்கு பொதுவெளியில் வைக்கப்போகிறோம். அதற்கு அரசு அனுமதி தரவேண்டும் என்று ஓர் இந்து அமைப்பு கோரியது. அரசு ஊர்வலத்திற்கும் ஆட்கள் கூடுவதற்கும் தடை இருக்கிறபோது வழிபடுவதற்கு எப்படி அரசு அனுமதிக்கும்? அனுமதிக்கவில்லை. இதை பாஜக முருகன் வழிமொழிவதாக வேறு சொன்னார். பாஜகவினரோ அந்த அமைப்போ ஒன்றரை லட்சம் விநாயகர்களை சதுர்த்தி அன்று வழிபட வெளியே வந்தார்களா? அவ்வளவு வீரர்கள் இவர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளது.
அதோடு, முரசோலி கட்டுரையில், “வாஜ்பாய் காலத்தில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை நினைவு கூர்ந்துள்ள முரசொலி நாளிதழ் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் அப்போது கூட்டணியில் திமுக இருந்ததாகவும் பாஜகவோடு முற்றிலும் இரண்டறக் கலந்துவிட மாட்டோம். கலக்க முடியாது” என்று திமுக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
திமுகவின் முரசொலி நாளிதழ் திடீரென தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை பாராட்டியுள்ளதால் பாஜகவினர் இது திமுகவின் புது யுக்தியா என்று அல்லது இதில் வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று புரியாத புதிராக கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.