தி.மு.க நாளேடான முரசொலி, விசாரணை வளையத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன் என்பது தொடர்பான சரமாரி கேள்விகளை எழுப்ப்பியிருக்கிறது.
இது தொடர்பாக முரசொலி நாளேடு, "குடியரசு தினத்தன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் குதர்க்க அறிக்கை வெளியிடும் ஆளுநர் ரவி, தன்னைப் பற்றி ஊடகங்கள் எழுதி வரும் செய்திக்கு இதுவரை விளக்கம் அளித்தாரா என்றால் இல்லை. அச்செய்தியில் அவரது கண்ணுக்கு இன்னும் தெரியவில்லையா?
19.1.2025 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' இதழில், 'கவர்னரின் திருவிளையாடல்' என்ற தலைப்பில் (பக்கம் 3) வெளியாகி இருக்கும் செய்திக்கு ஆளுநர் ரவி முதலில் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த செய்தி இதுதான்.
“எடப்பாடிக்கு நெருக்கமானவரின் கல்லூரியில் உற்சாகமாக விழா கொண்டாடியிருக்கிறாரே ஆளுநர்... கவனித்தீரா?” “அங்கிருந்துதானே வருகிறேன்... திருச்சி மாவட்டத்தில் இருக்கும் முசிறி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' என்ற கல்வி நிறுவனம், எடப்பாடியின் வலது கரமான சேலம் புறநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இளங்கோவனுடையது. இவர்மீதும் இவருடைய மகன் பிரவீன்மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு, கூட்டுறவு வங்கி முறைகேடு என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில்தான் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அந்தக் கல்லூரியில் ரெய்டு நடத்தி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு அறைகளை சீல் வைத்திருக்கிறது ஐ.டி. இவ்வளவு சிக்கலான சூழலில்தான், அந்தக் கல்லூரியில் பொங்கல் விழாவைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி" “ஆளுநர் பங்கேற்கிறார் என்றால் நிகழ்ச்சி நடக்கும் கல்லூரி நிர்வாகம் குறித்து பலகட்ட விசாரணைகள் நடந்திருக்குமே?"
“அதில்தான் சர்ச்சைகள் வெடிக்கின்றன. 'ஒரு விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிறார் என்றால் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குறித்து அலசி ஆராயப்படும். அப்படியிருக்கும்போது, ஐ.டி.ரேடாரிலுள்ள முக்கியப் புள்ளியான சேலம் இளங்கோவன் கல்லூரிக்கு எப்படிப் போனார் கவர்னர்?' என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதில்களைச் சொல்கிறார்கள். அதாவது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திவருகிறது டெல்லி. அந்த வகையில், 'இளங்கோவனைப் பகடையாகப் பயன்படுத்தி, அவரது ரூட்டிலும் முயற்சி நடக்கிறது' என்கிறார்கள் ஒரு தரப்பினர். அதேநேரம், இளங்கோவனின் சர்ச்சைக்குரிய பின்னணி, ஆளுநருக்குத் தெரிந்திருந்தால், நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்கச் சம்மதித்திருக்க மாட்டார்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதாவது, இளங்கோவன் குறித்த தகவல்களை மறைத்து 'இயற்கை விவசாயிகளோடு பொங்கல் நிகழ்ச்சி என்று ஆளுநரையும், அவருடைய இல்லத் தரப்பையும் பவன் புள்ளிகள் அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இது ஆளுநரின் திருவிளையாடலா அல்லது அவரை வைத்து விளையாடிவிட்டார்களா... என்று பட்டிமன்றம் நடக்கிறது பவன் வட்டாரத்தில்."
“எது எப்படியோ... ஆளுநரின் விசிட்டால் இளங்கோவன் தலைக்குக் கொஞ்ச நாளைக்கு ஆபத்து இருக்காது” – என்கிறது ‘ஜூனியர் விகடன்'. ஆளுநர் பெருந்தகை இதற்கு விளக்கம் அளித்திருக்க வேண்டாமா?
ஜனவரி 22-24 தேதியிட்ட ‘நக்கீரன்' இதழில் 'கவர்னருடன் அ.தி.மு.க. பேரம்' என்ற தலைப்பில் (பக்கம் 15-16) செய்திக்கட்டுரை தீட்டப்பட்டுள்ளது. அந்தச் செய்தி இதுதான்...
“ஜனவரி 11ஆம் தேதி முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக ஆளுநர் சென்றுள்ளார். அதை முடித்து- விட்டு மற்றொரு என்.ஜி.ஓ. நிகழ்ச்சிக்கும் சென்றுள்ளார்.
முசிறியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் உரிமையாளர், எடப்பாடியின் நெருங்கிய நண்பரான அ.தி.மு.க. இளங்கோவன். இவர் ஏற்கெனவே கூட்டுறவு சங்க சேர்மனாகவும் இருந்துள்ளார். அப்போதுதான் மோடி ஆட்சியில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென அறிவிக்கப்பட்டன. அந்த நேரத்தில், செல்லாத ரூபாய் நோட்டுக்களை சேலம் கூட்டுறவு சங்கத்தில் மாற்றிக்கொடுத்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கினார். 2012-22 வரை எடப்பாடி வகித்து வந்த கட்சிப் பதவி இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது. அந்தளவிற்கு எடப்பாடிக்கு விசுவாசியாகவும், பினாமியாகவும் செயல்படுபவர்தான் இந்த இளங்கோவன். சென்ற வாரம்கூட இளங்கோவனின் சம்பந்தி மற்றும் அவர் தொடர்பான இடங்களில் ஈ.டி. சோதனை நடந்துள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு பிறகு தான் முசிறிக்கு ஆளுநர் சென்றுள்ளார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர், ஈ.டி. விசாரணைக்குள்ளான ஒருவரின் கல்லூரிக்கு அடுத்த நாளே சிறப்பு அழைப்பாளராகப் போகிறார் என்றால் எந்தளவிற்கு அ.தி.மு.க.வுக்கும் ஆளுநருக்கும் மறைமுகக் கூட்டணி இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டுகிறது.
மேலும் இந்த விவகாரத்தால் ஆளுநர் பதவிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, அவருடைய நேர்மையிலும் சந்தேகம் எழுகின்றது. இந்தக் கல்லூரி விழாவில் ஆளுநர் கலந்துகொண்ட விஷயம் கேள்விப்பட்டதுமே ஒன்றிய உள்துறை அமைச்சகத்திலிருந்து அதுகுறித்து விசாரணை செய்துள்ளார்களாம். அதேவேளை நிர்மலா சீதாராமனும் இதுகுறித்து விசாரித்துள்ளாராம்.
எடப்பாடியின் பினாமியாக இருந்துவரும் இளங்கோவனின் கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்றது வெறுமனே பொங்கல் விழாவாக இல்லாமல், அவர்கள்மீது நடத்தப்படும் ஈ.டி. விசார- ணையை நிறுத்துவதற்கு ஆளுநர் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும்தான் என்ற தகவல் கசிந்துள்ளது...”– என்று எழுதி இருக்கிறது ‘நக்கீரன்' இதழ்.
வருமானவரி, அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆளுநர் சென்றதன் பின்னணி என்ன? மர்மம் என்ன? பொய்களையும் புனைவுகளையும் தினந்தோறும் அறிக்கையாக, பேச்சு களாக உதிர்த்துவரும் ஆளுநர், தன் மீது தமிழ்நாட்டு ஊடகங்கள் எழுதும்செய்திகளுக்குப் பொதுவெளியில் முதலில் விளக்கம் அளித்திருக்க வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.