உத்தரப்பிரதேசம், பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் இந்தி பேசும் மக்கள் எங்களுக்காக கழிப்பறைகளையும், சாலைகளையும் சுத்தம் செய்கிறார்கள் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தயாநிதி மாறனின் பேச்சுக்கு இப்போது பாஜக தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
’பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜேடி(யு), ஆர்ஜேடி மற்றும் சமாஜ்வாடி போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. திமுகவும் இந்தக் கூட்டணியில் உள்ளது. நிதீஷ் குமாரும், லாலு யாதவும் இந்தி பேசும் மக்கள் குறித்த தங்கள் கூட்டணிக் கட்சியின் கருத்துக்களுடன் உடன்படுகிறார்களா? இந்தி பேசும் மக்கள் மீது திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்’, என்று பீகார் பாஜக எம்பி கிரிராஜ் சிங் ட்விட் செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, திமுக தலைவர்கள் தங்களது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர்.
கடந்த செப்.2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமுஎகச மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’கொசுக்கள், டெங்கு, காய்ச்சல், மலேரியா, கொரோனா இவற்றை நாம் எதிர்க்கக் கூடாது. அவை ஒழிக்க வேண்டும். சனாதனம் விஷயத்திலும் அப்படித்தான். சனாதனத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அதை ஒழிப்பது, அழிப்பதுதான் நமது முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், சமீபத்தில் வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதேநேரம் தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் டிச.5 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், ஹிந்தி பேசும் கோமூத்திர மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் உங்களால் ஒருபோதும் நுழைய முடியாது என்று பேசி இருந்தார்.
அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டார்.