2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக வியாழக்கிழமை பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமாரை திமுகவில் இணைந்த நிலையில், அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துதரும் பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் நடவடிக்கைக் குழுவுடன் (ஐபிஏசி) வரும் மாதங்களில் தேர்தல் பிரசார உத்திகள் தொடர்பாக திமுக ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம், புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் முன்னிலையில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்.க்குப் பிறகு தான் பார்த்து ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார்” என்று பேசினார். பி.டி.அரசகுமாரின் இந்தப் பேச்சு தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் நயினார் நாகேந்திரன் அகில இந்தியத் தலைமைக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், பி.டி.அரசகுமாரின் பேச்சு பாஜகவின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் மீறும் செயல். தேசிய தலைமையிலிருந்து தகவல் வரும் வரையிலும் அவர் எந்தவித பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளகூடாது” எனக் குறிப்பிட்டார். பாஜகவைச் சேர்ந்த பலரும் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து, பி.டி.அரசகுமார் வியாழக்கிழமை மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்க் கழகத்துக்கு திரும்பியுள்ளேன்” என்று கூறினார்.
இது குறித்து திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அரசகுமார் கட்சியில் சேருவதற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று கூறினார். “நாங்கள் அவரை ஏற்றுக்கொண்டோம், அவரை இழுக்கவில்லை. அவர் செந்தில் பாலாஜி போல வெகுஜனத் தலைவர் அல்ல” என்று அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்து, கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனிடையே, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மு.க.ஸ்டாலினும் பிரசாந்த் கிஷோரும் இறுதி செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த திமுக தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் நடவடிக்கைகள் குழுவின் 150 உறுப்பினர்களைக் கொண்ட குழு திமுகவுக்காக பணியாற்றக்கூடும்…” என்று கூறினார்.
திமுக எம்.பி. ஒருவர், 2021 தேர்தல் முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார். மேலும், “நாங்கள் ஏற்கனவே மாநிலத்தில் இடதுசாரிகள், தலித் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் ஒரு சக்திவாய்ந்த கூட்டணியைக் அமைத்திருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் முதன்மையாக சமூக ஊடகங்கள் மற்றும் புதுமையான பிரச்சார நுட்பங்களில் கவனம் செலுத்தலாம்” என்று கூறினார்.