திமுக கூட்டணி கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த நிலையில், திமுக மறைமுகத் தேர்தல் நடத்த உள்ளதாக தெரிய வந்துள்ளது.
திமுக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அண்மையில் நடைபெற்ற மாநில செயற்குழு குட்டத்தில், வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் அதாவது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அது மட்டுமில்லாமல், மதிமுக, சிபிஐ ஆகிய திமுகவின் கூட்டணி கட்சிகள் நேரடித் தேர்தலுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு ஆளும் திமுக மறைமுகத் தேர்தலை நடந்த்தும் என்பது வெளிப்பட்டு வருகிறது. திமுக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் தொண்டர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அளிக்க வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து, நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுமார் 90 சதவீத இடங்களை வென்றது. இந்த வெற்றி திமுகவின் செயல்பாட்டிற்கு மக்கள் அளித்த பாராட்டுப் பத்திரம் என்று திமுக தலைமைத் தெரிவித்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றுவதில் திமுக கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், திமுகவின் அதிகாரப் பூர்வ நாலிதழான முரசொலியில் வெள்ளிக்கிழமை சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் தொண்டர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரி அறிக்கை வெளியிட்டது. இது திமுக கூட்டணி கட்சியினரிடையே, பேரூராட்சி, நகராட்சி, மேயர் பதவிகளில் பங்கீடு கிடைக்குமா? கிடைக்காதா என்ற கேள்விகளை உருவாக்கியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத இடதுசாரி கட்சிகளின் தலைவர் ஒருவர் கூறுகையில், “திமுக குறைந்த பட்சம் கூட்டணிக் கட்சிகளுடன் நல்லுறவைப் பேண வேண்டுமானால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளூக்கு மறைமுகத் தேர்தல் நடத்த முடிவெடுத்ததை தெரிவித்திருக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்கும், தொண்டர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் இது முக்கியம். இதனை திமுக முன்பே தெரிவித்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் வெற்றிக்காக களத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கூட்டணியை விட ஒற்றுமைதான் முக்கியம். அதே நேரத்தில், அனைத்து பேரூராட்சி, நகராட்சி தலைவர், மேயர் பதிவிகளை திமுகவே வைத்துக்கொள்ள முயன்றால், கூட்டணியில் விரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று கூறினார்.
திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியின் தலைவர் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன், திமுக தலைமை அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களை உறுதி செய்ய வேண்டும். இது அனைத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற திமுகவுக்கு உதவும். அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவது முக்கியம் என்பதால் திமுக கூட்டணி கட்சிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது” என்று கூறினார்.
இது குறித்து திமுக உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், “திமுக தலைமை சூழ்நிலையைப் பொறுத்து முடிவுகளை எடுக்கும். ஏற்கனவே, சென்னை வாக்காளர்களின் அவலநிலைக்கு திமுக காரணம் இல்லையென்றாலும் சமீபத்திய மழை காரணமாக நாங்கள் சில அதிருப்தியைக் கண்டோம். கூட்டணி கட்சிகளின் ஆதரவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். அதனால், எங்களுடைய தலைமை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுகவின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஏ.எம் பாபு முருகவேல் ஊடகங்களிடம் கூறுகையில், “தேர்தல் வருவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், ஆளும் கட்சி விண்ணப்பங்களைப் பெற அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அர்த்தம், மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது என்றே பொருள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்தால் அதிமுக மட்டுமே வெற்றி பெறும். ஆனால், திமுக, ஆளும் கட்சியாக இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ள திமுக நடவடிக்கை எடுத்து வருவதாக மற்ற கட்சிகள் கருதுகின்றனர்” என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள், பேரூராட்சித் தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், ஆளும் கடியான திமுக மறைமுகத் தேர்தல் நடத்தும் என்பது தெரியவதுள்ளது. இதனால், கூட்டணி கட்சிகள் தங்களுக்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.