/indian-express-tamil/media/media_files/2025/03/22/NObuVndKgAcZUhvjG1Rf.jpg)
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தி.மு.க தலைமையில் இன்று (மார்ச் 22) சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கேரளா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களான பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, பகவந்த் மான் மற்றும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இது தவிர பிஜூ ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் மூத்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். இதேபோல், மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DMK hosts Opposition meet on delimitation today: 4 CMs, BJD and BRS to attend; TMC opts out
தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் கூட்டாட்சிக் கொள்கைகள் சிதைக்கப்பட்டு, குறிப்பிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம், விகிதாச்சாரத்தில் குறைந்துவிடும் என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் செய்வதற்காக இன்றைய கூட்டம் நடத்தப்படுகிறது
இந்த முயற்சிக்கு பின்னணியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம்பெறுகிறார். முன்னதாக, இந்திய கூட்டாட்சிக்கான வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்தக் கூட்டம் அமையும் என்று அவர் தெரிவித்தார். "மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்த மாநிலங்களுக்கு தண்டனை கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படக் கூடாது. இது இந்தியாவில் கூட்டாட்சியின் கட்டமைப்பை சிதைக்கும் வகையில் இருக்கும். ஜனநாயகத்தின் சாரத்தையே இது சிதைத்துவிடும்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்று காலை சுமார் 10 மணியளவில் சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர உணவகத்தில் இந்தக் கூட்டம் தொடங்குகிறது. மதியத்தைக் கடந்த இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் முடிவடைவதற்கு முன்பாக அதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க அனைத்து தலைவர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், இன்று காலை சென்னைக்கு வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி இருக்கும் தற்போதையை தொகுதி நிலவரம், 2026-ஆம் ஆண்டைக் கடந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்படலாம். மேலும், தொகுதி மறுசீரமைப்பை மறுபரிசீலனை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும். இதற்காக விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளுதல், சட்ட நடவடிக்கைகளை ஆராய்தல் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
"தமிழ்நாடு அளவில் எடுக்கப்பட்ட முயற்சி தற்போது தேசிய அளவிளான இயக்கமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. நியாயமான பிரதிநிதித்துவத்தை கோருவதற்கு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் கைகோர்த்து வருகின்றன. இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாக அமையும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எந்த மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்த ஆலோசனை, இப்பிரச்சனையை தேசிய அளவில் எவ்வாறு கொண்டு சென்று கவனம் பெறுவது உள்ளிட்டவை இதில் ஆலோசிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பி-க்களின் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்தது. நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும். நமது உரிமைகள் மறுக்கப்படும்" என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இதே உணர்வு தெலங்கானாவிலும் எதிரொலித்தது. இந்த விவகாரம் கூட்டாட்சி சமத்துவத்திற்கு எதிரானது என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார். இந்த பிரச்சனை கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த விஷயத்தில் பரந்த, தேசிய உரையாடலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார். தென்மாநிலங்களை பொறுத்தவரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மட்டுமே இதில் இடம்பெறவில்லை. அவர் பா.ஜ.க-வின் கூட்டணியில் அங்க வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தின் முக்கியத்துவம்:
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொகுதி மறுசீரமைப்பை பா.ஜ.க எளிதாக எடுத்துக் கொள்ளாது என்று தி.மு.க கருதுகிறது. இந்த விவகாரத்தில் தென்னிந்தியா மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து வலுவான செய்தி அனுப்பப்படும் என்று நம்பப்படுகிறது.
சமீப நாட்களில் முதன்முறையாக தேசிய அளவிலான அரசியல் மாற்றங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இதில் கூட்டணி குறித்து முக்கியத்துவம் காண்பிக்கப்படுவதை கடந்து, தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையில் கவனம் செலுத்துகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் கூட தமிழ்நாட்டில் இத்தகைய ஒரு பெரிய அளவிலான கூட்டத்தை நடத்தவில்லை. இது பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது தேர்தல் பிரச்சனை மட்டுமல்லாமல், ஆட்சி ரீதியான பிரச்சனையாக இந்தக் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வலியுறுத்தும். இதன் மூலம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மாநிலங்கள் எதிர் கொள்ளக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 5-ஆம் தேதி, இது தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க-வை தவிர பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் கூட்டம் தேசிய அளவில் கவனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கோவைக்கு வருகை தந்தார். அப்போது, தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதி குறையாது என்று அவர் கூறினார். எனினும், அவரது கருத்து அரசியல் ரீதியானது என்றும், அதிகாரப்பூர்வமாக இது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டி, இந்தக் கூட்டத்தை தி.மு.க முன்னெடுத்துள்ளது.
- Arun Janardhanan
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.