scorecardresearch

தி.மு.க-வில் இருந்து விலகியது ஏன்? சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை

திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க-வில் இருந்து விலகியது ஏன்? சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிருந்து விலகுவதாக இன்று (செப்.20) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2009இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின்படி தளபதி அவர்களை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று பதவியில் இருந்தும், கட்சியிலிருந்து விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கட்சி குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. சுப்புலட்சுமியும் திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அவர் விலகியதாகவும் தகவல் வெளியானது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது, இதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சரஸ்வதியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்றால் முக்கிய பதவியில் அமர்த்தப்படுவார் என அப்போது திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Dmk deputy gen secy subbulakshmi jagadeesan quits politics