Advertisment

திமுக வழங்கிய ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

DMK District Secretaries Meeting : திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
Jan 21, 2021 21:29 IST
திமுக வழங்கிய ஊழல் புகார்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க சார்பில் தலைவர் ஸ்டாலின் அதிமுக வை எதிர்போம் என என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடைய தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

தீர்மானம்  :  1

“அ.தி.மு.க.வை நிராகரிப்போம்” என அகிலம் அதிர முழங்கிய 1.05 கோடி தமிழ் மக்கள்! மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தமிழகம் எங்கும் வெற்றிகரமாக நடத்திய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! மாநிலம் முழுவதும் 21,500-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் - வார்டுகளிலும் இக்கூட்டங்களை நடத்தி, மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்துள்ள ஒரே இயக்கம், இந்தியத் துணைக் கண்டத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என்பதை, இந்தக் கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

தீர்மானம்  :  2

இந்தியாவிலேயே ஊழலில் புரையோடிப் போன ஆட்சியை நடத்தி - தமிழகத்திற்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள முதலமைச்சர் திரு.பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.விற்கு கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு - சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா பிடியிலும் - அதனைத் தொடர்ந்து, சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழலில் உயர் நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதலமைச்சர் திரு.பழனிசாமி பிடியிலும் உள்ள ஒரே கட்சி அ.தி.மு.க.!

முதலமைச்சர் திரு.பழனிசாமி உள்ளிட்ட அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 97 பக்கங்கள் கொண்ட பல்வேறு ஊழல் புகார்கள் கொண்ட பட்டியல் அளித்துள்ளதை இக்கூட்டம் வரவேற்கிறது. இந்தப் புகார்கள்மீது மாண்புமிகு ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறது. எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இப்புகார்கள்மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்  :  3

பாலியல் வன்முறையினால் பதைபதைத்து வாய்விட்டலறும் இளம் பெண்களின் அவலக் குரலை உதாசீனம் செய்து - பொள்ளாச்சி இளம் பெண்களின் வாழ்வினை சூறையாடிய முக்கியக் குற்றவாளிகளை இன்னமும் மூடி மறைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், அ.தி.மு.க. அமைச்சர்களின் அரவணைப்பில் இருந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியும் - இதுவரை முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்து, பாதுகாத்து வருவதைக் கண்டு இக்கூட்டம் மிகுந்த வேதனைப்படுகிறது.

தீர்மானம்  :  4

டெல்லியில் வேகமாக வீசி வேதனைப்படுத்தும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்து - முழுமனதோடு அ.தி.மு.க.வினால் ஆதரிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயப் பெருமக்கள் நடத்தும் “டெல்லி முற்றுகை”ப் போராட்டம் 58-ஆவது நாளாக நடைபெற்று வருவதை மிகுந்த மனக்கவலையுடன் இக்கூட்டம் தனது உணர்வு பூர்வமான பாராட்டுதலையும், உறுதியான ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் வீண் ஜம்பப் பிடிவாதத்தால் - உச்சநீதிமன்றமே தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தும் - இப்போதுகூட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  :  5

காவிரி டெல்டா உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மார்கழிப் பெருமழையில் அடியோடு நாசமாகி - பொங்கல் பண்டிகை நேரத்தில் விவசாயிகள் அனைவரும் பெருந்துயருக்கும், பேரிழப்பிற்கும் உள்ளாகியிருப்பதை அ.தி.மு.க. அரசு வீணே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  :  6

30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத் தலைவர், தமிழக ஆளுநரைச் சந்தித்து இதுகுறித்து ஏற்கனவே நேரில் வலியுறுத்தியிருப்பதை இக்கூட்டம் நினைவுகூர்கிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் - ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தினை ஏற்றுக் கொள்ளாமல், தமிழக ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் காலம் கடத்தி வருவதற்குக் கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையைத் தெரிவித்துக் கொள்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment