அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட திமுகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.
நீண்ட காலமாக நீடித்து வந்த அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்ததையடுத்து, உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவதற்கு, பிரதமர் மோடி கடந்த ஆண்டு 5-ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்த ராமர் கோயில் 360 துண்களுடன் 161 உயரத்தில் கட்ட வடிவமைக்கப்பட்டு மாதிரி படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோயிலைக் கட்டி முடிபதற்கு ரூ.1,100 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நன்கொடைகளை வசூலித்து வருகிறது. பிப்ரவரி 27ம் தேதி வரை நன்கொடை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையைச் தன்னார்வலர்கள் இணைந்து ராமர் கோயில் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் நன்கொடை வசூலித்து வருகின்றனர்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடையாக, தினக்கூலி தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என பலதரப்பினரும் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக அளித்து வருகின்றனர். அண்மையில், சென்னையைச் சேர்ந்த ஹபிப் என்ற முஸ்லிம் தொழிலதிபர் அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு 1 லட்சத்து 8 ரூபாய் நன்கொடை அளித்து நன்கொடை வசூலித்தவர்களையே ஆச்சரியப்படச் செய்தார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளரான திருத்தனி எம்.பூபதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
திமுக அயோத்தி விவகாரத்தில் பாஜகவுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திருமக் பொறுப்பாளர் திருத்தனி எம்.பூபதி ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை அளித்திருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக பொறுப்பாளர் திருத்தனி எம்.பூபதி ஊடகங்களிடம் கூறுகையில், “பாஜக பிரமுகர்கள் சிலர் பிப்ரவரி 17ம் தேதி கோயிலுக்கு நிதி திரட்டுவதாகச் சொல்லி என்னை வந்து சந்தித்தனர். அவர்களில் ஒருவர் என் வீட்டுக்கு அருகே வசிப்பவர். கோவிலுக்கு நன்கொடை அளிப்பது என்னுடைய வழக்கம். எங்கள் கட்சி தலைமை கடவுளைக் கும்பிடக்கூடாது என்று எங்கும் சொன்னதில்லை. அதே நேரட்தில் நான் கடவுளை வெளிப்படையாகத்தான் வணங்கி வருகிறேன். அதனால், அன்று கோவிலுக்கு நன்கொடை கேட்டு வந்தவர்களிடம் ஐந்தாயிரம் ரூபாய் நன்கொடை அளித்தேன். நன்கொடை ரசீதை என் பிள்ளைகள் பெயரில்தான் பதியச் சொன்னேன்.
அன்றைக்கு திமுக தலைவர் மதுரையில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த பரபரப்பில், வந்திருந்தவர்கள் எந்தக் கோவிலுக்கு நிதி திரட்டினார்கள் என்கிற விவரத்தை நான் கேட்கவில்லை. நன்கொடை பெற்றவர்கள் சமூக ஊடகங்களில் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட 50 ஆயிரம் ரூபாய் நிதியளித்தது போல ஒரு தவறான தகவலை பரப்பிவிட்டார்கள். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கடவுள் காரியங்களுக்குச் செய்வது புண்ணியம் என்பதால்தான் நிதியளித்தனே தவிர, அதைவைத்து இப்படி ஒரு அரசியல் விளையாட்டு நடக்கும் என்று நினைக்கவில்லை.” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்து விவாதமாக்கிய திமுக பொறுப்பாளர் திருத்தனி பூபதி இந்த முறை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்து கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.